×

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் மாசடைந்த பிரகதாம்பாள் கோயில் குளம் தூய்மைப்படுத்தப்படுமா?

*பக்தர்கள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் ஏழாம் நூற்றாண்டில் உருவான பிரகதம்பாள் கோயில் குளம் மாசடைந்துள்ளது. இதை சுத்தப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் பிரசித்தி பெற்றதாகும். மன்னர்கள் காலத்தில் குல தெய்வ கோயிலாகவும் இருந்து வந்தது. ஆன்மிக சுற்றுலா வருபவர்கள் பிரகதாம்பாள் கோயிலுக்கு வந்து செல்வது உண்டு. கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் வருகையும் அதிகமாக உள்ளது. இந்த கோயிலின் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது. இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது திருகோகர்ணம் குடவரைக்கோயில் ஆகும். குடவரை கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப்பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை. திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச்சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னால் உள்ள மண்டபப்பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும், வடப்புறச் சுவர் பகுதியில் கங்காதரமூர்த்தியும் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மண்டபப் பகுதி முழுவதும் நான்கு தூண்களின் மீது அமைந்துள்ளது போல் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

சந்நிதியின் இடப்புறம் உள்ள சுவரைக் கற்பனையால் விலக்கி விட்டுப் பார்த்தால் விநாயகர் திருமேனிக்குப் பின்புறமாகவும் பாறைச் சரிவு நீண்டிருப்பதைக் காணலாம். இந்த பாறைச்சரிவின் அடிப்புறத்தில், தரையோடு ஒட்டியதுபோல் ஏழு பெண் தெய்வங்களின் திருவுருவங்கள் குடைவரைக் கலையாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. இடப்புறம் வீரபத்திரர் திருமேனியும், வலப்புறக் கோடியில் விநாயகர் திருமேனியும் விளங்க, இடையில் ஸப்த கன்னிமார்கள் அல்லது ஸப்த மாதாக்கள் என்னும் திருநாமத்தோடு ஏழு பெண் தெய்வங்களின் திருமேனிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பைரவி, இந்திராணி, மாகேஸ்வரி, நாராயணி, வராஹி, கௌமாரி, பிடாரி - என்ற இந்த ஸப்த மாதர்களின் திருமேனிகள் வெகு நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இந்த சிற்ப வடிவங்கள் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவர்களின் கலைப்பணிகளாக இருந்த போதிலும் இந்தக் கருவறைகளை உள்ளடக்கிய மண்டபப் பகுதிகள் பதினோராம் நூற்றாண்டுச் சோழர்களின் கலைப்பணி என நம்பப்படுகிறது. கி.பி. 1012ல் அரசுரிமையேற்ற பரகேசரி முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இந்த பிரகதாம்பாள் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எந்த கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பாக, திருகோகர்ணம் கோயிலில்தான் மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த மாடிப் பகுதியில் முதலாம் ராஜேந்திரன் காலக்கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இந்த மாடியில் முருகன் வள்ளி தேவசேனாவுடன் எழுந்தருளியுள்ள கோயிலுக்குத் தென்புறம் உள்ள பாறைச் சரிவில் காணப்படுகிறது. கட்டுமானங்கள் இல்லாமல் பார்த்தால் கோகர்ணேசுவரர், சப்த கன்னிமார் திருமேனிகள் உருவாக்கப்பட்டுள்ள பாறையின் மேல் பகுதியில் இக்கல்வெட்டு அமையும். முருகன் கோயிலையொட்டி வடபுறச் சுவருக்கு அப்பால் பாறை நீண்டு உயர்ந்திருக்கிறது. மேற்குப் புறப்பாறைப் பிளவில் சுனை, வற்றாத நீர்வளத்தோடு விளங்குகிறது. இக்கோயிலின் அருகே குளம் ஒன்று உள்ளது.

இந்த குளத்தில் இருந்து பிரகதாம்பாள் கோயில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து செல்லப்படுவது வழக்கம். மேலும் பொதுமக்களும் குளிப்பார்கள். இந்த நிலையில் இக்குளம் தற்போது சுகாதார கேடாக காணப்படுகிறது. குளத்தின் கரைகளிலும், தண்ணீரிலும் மதுப்பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த குளக்கரை பயன்பட்டு வருவதாக பக்தர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் இந்த குளம் போதிய அளவில் பராமரிக்கப்படாததால் தாமரை செடிகள் மற்றும் பாசிப்படர்ந்து காணப்படுகிறது. குளத்தின் தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் பொதுமக்கள் இந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் கோயிலுக்குரிய தீர்த்தங்கள் குடிநீர் குழாயில் பிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இக்குளத்தை சுத்தம் செய்ய பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குளத்தின் கரைகளில் அமர்ந்து மதுக்குடிக்க விடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர். பெரிய குளம் என அழைக்கப்படும் இக்குளத்தினை பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த குளத்தின் அருகே தான் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:

குளத்தை சுற்றி பராமரிப்பு இன்றி திறந்தவெளி கழிப்பிடமாக சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். அதே போல் குளத்தின் கரையை சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடப்பதால் கிரிவலம் சுற்றி வரும் பெண்கள் வயதானவர்கள் சிறுவர் சிறுமியர் அச்சத்தில் சென்று வருகின்றனர். மேலும் இந்த பாதையில் மின் விளக்குகள் போதிய அளவு இல்லாததால் இருளாக காணப்படும்.

இரவு நேரங்களில் சாலைகளில் இரு புறங்களிலும் திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதியில் அதிக அளவில் கழிவு குப்பைகளை கொட்டுவதாலும் இறந்த நாய், பூனை போன்றவற்றை இப்பகுதியில் கொண்டுவந்து போடுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் தொற்று நோய் பரவும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pragathambal temple ,tukkokotta tirukkornam , Pudukottai: The Prahadambal temple pond in Pudukottai, built in the seventh century, has become contaminated. Devotees want to clean this
× RELATED புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்