×

மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் கோயில் உண்டியலை திறக்க பூசாரிகள் எதிர்ப்பு

*அதிகாரிகளுடன் தகராறு; போலீசார் சமரசம்

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் அங்களாம்மன் கோயில் உண்டியல் திறப்பில் தகராறு ஏற்பட்ட நிலையில், உண்டியலை தூக்கி செல்ல முயன்றனர். இதில் இருதரப்பிலும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் மரப்பறை கிராமத்தில், 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் காலங்காலமாக அதே பகுதியை சேர்ந்த சிலர் பூசாரியாக இருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து 1929ம் ஆண்டில் இருந்து இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாசி மாதம் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவின் நிறைவு நாளில் வழக்கமாக உண்டியல் திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி, செயல் அலுவலர் சிவகாமி ஆகியோர் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ண வந்தனர். அப்போது பரம்பரை பூசாரிகள், இந்து சமய அறநிலையத்துறைக்கு இக்கோயிலில் உரிமை இல்லை எனவும், காணிக்கைகளை நாங்கள்தான் எடுத்துக் கொள்வோம் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உண்டியலை தூக்கிச் செல்ல முயன்றனர்.

உடனடியாக எலச்சிபாளையம் போலீசார் தலையிட்டு அறநிலையத் துறையினரை பணி செய்ய விடாமல் தடுக்கக் கூடாது என கூறி ஊராட்சி தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட பலரை கோயிலுக்கு வெளியே அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. தாங்கள் வைத்த சீல் எப்பொழுதும் இருப்பதில்லை எனவும், அடிக்கடி பூட்டுகள் மாற்றப்பட்டு விடுகிறது எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அறநிலையத்துறைக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரை, ஊராட்சி தலைவர் பழனியப்பன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, விஸ்வநாதன் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து நித்தியானந்தம் எலச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலேயே நித்தியானந்தம் காத்திருந்தார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நித்தியானந்தம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் மரப்பறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Temple Pickle ,Mallasamuthram Union , Mallasamutram: In the Mallasamutram Union, there was a dispute over the opening of Anglamman temple bill, to remove the bill.
× RELATED மதுரை உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் உடைப்பு