×

நாடுகாணியில் இருந்து கீழ் நாடுகளின் வழியாக கேரளா செல்லும் தமிழக நெடுஞ்சாலையை விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்

கூடலூர் :  நாடுகாணியில் இருந்து கீழ் நாடுகளின் வழியாக கேரளா செல்லும் தமிழக நெடுஞ்சாலை மோசமாக உள்ளதால் விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். கூடலூரை அடுத்த  நாடுகாணியில் இருந்து கீழ்நாடு காணி வழியாக கேரளா செல்லும் சாலையில் தமிழக எல்லைப் பகுதியில் சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதோடு பழுதடைந்தும் வருகின்றன. இதன் காரணமாக இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பின்றி காணப்படும் இந்த சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்களை இயக்க முடியாத நிலையில் உள்ளது. ஒரு சில பகுதிகளில் அப்பகுதி மக்களின் பள்ளங்களில் மண்ணை போட்டு மூடினாலும் மீண்டும் விரைவில் . பழுதடைந்து போக்குவரத்திற்கு கடினமான சாலையாக உள்ளது. நெடுஞ்சாலை துறை சார்பில் பள்ளங்களில் நிரப்ப்பட்ட பாறை மண்ணும் கரைந்து பள்ளங்கள் வெளியே தெரிகின்றன.

 அரசு பேருந்துகள் கனரக சரக்கு வாகனங்கள் தனியார் வாகனங்கள் சுற்றுலா வாகனங்கள் என தினசரி  நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக கனரக சரக்கு வாகனங்கள் பள்ளங்களில் இறங்கும் போது பழுது ஏற்படுவதால் சாலை போக்குவரத்தும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் இந்த சாலை வழியாக பெருந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும், கள்ளிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் சென்று வருகின்றனர்.

நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களை இந்த சாலையில் மிகுந்த சிரமத்தில் மத்தியிலேயே இயக்க வேண்டி உள்ளது. அவசர தேவைகளுக்கு விரைவாக இயக்கிச் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் பசுமை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உரிய பராமரிப்பு இன்று சாலை மோசமான நிலையில் உள்ளதால் பசுமை வரி வசூலிப்பவர்களிடம் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலையின் நிலைமை குறித்து அதிருப்தி தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த சாலையில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வருடம் அப்பகுதி மக்கள் மட்டும் வாகனம் ஓட்டுநர்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள்  மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையை முழுவதுமாக ஆய்வு செய்தனர். பின்னர் தற்காலிகமாக பள்ளங்களை மூடுவதாகவும் மழைக்காலம் முடிந்ததும் சாலை முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து பள்ளங்களில் எம் சான்ட் பாறைப்பொடி நிரப்பப்பட்டது. இந்த சாலையில் தொடர்ச்சியாக வாகன போக்குவரத்து உள்ளதன் காரணமாக சீக்கிரமாகவே மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்காலம் முடிந்த பின்பும் இந்த சாலையில் சீரமைப்பு பணிகள் துவக்கப்படவில்லை. மேலும்  இந்த மலைப்பாதையில் பள்ளமான பகுதிகளில் ஆபத்தான இடங்களில் தடுப்புகள் ஏற்படாததால் சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்டவை இப்பகுதியில் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இந்த சாலையை முறையாக சீரமைத்து பராமரிப்பதோடு சாலையில் விபத்தை ஏற்படக்கூடிய பள்ளமான பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Nadukani ,Kerala , Kudalur: The Tamil Nadu highway from Nadukhani to Kerala through the lower states is in bad shape and needs to be repaired soon.
× RELATED தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை...