விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மயிலம் ஒன்றியம் சித்தணி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் ரூ.1,34,379 மதிப்பில் 1.10 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பாகற்காய், முட்டைகோஸ் மற்றும் மணிலா பயிர்களை பார்வையிட்டார். பின்னர் விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி ஊராட்சியில் கிளை நூலகம் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட அவர், புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு நாள்தோறும் தூய்மைப்பணியை மேற்கொண்டு நூலகத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டுமென நூலகருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர், மருத்துவர்கள், செவிலியர்கள் வருகைப்பதிவேடு, மருந்து கையிருப்புப்பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மதுரப்பாக்கம் துணை சுகாதார நிலையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளின் விவரத்தை கேட்டறிந்ததுடன் தொடர் சிகிச்சை பெற்று வரும் பயனாளிக்கு ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகமும் வழங்கினார்.
பின்னர், விழுப்புரம் நகராட்சித்துறை சார்பில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2021- 2022-ன் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் விழுப்புரம் கல்லூரி சாலையில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறிவுசார் மைய வளாகத்தின் முன்புறம் போட்டித்தேர்விற்காக தயாராகும் மாணவர்கள் அமைதியான, காற்றோட்டமான சூழ்நிலையில் படித்திடும் வகையில் புல்தரை மற்றும் நிழல் தரக்கூடிய மரங்களும் நட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன் பிறகு விழுப்புரம் நகராட்சியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு தங்கி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாணவிகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள், சுகாதாரமான குடிநீர் வசதி, மின் வசதி, கழிவறை வசதிகளை பார்வையிட்டதுடன் மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கலகெ்டர் பழனி, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, ஆதிதிராவிட நல அலுவலர் பத்மலதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர்
கணேசன், அதிகாரிகள் உடனிருந்தனர்.