×

இலங்கையில் வாக்குச்சீட்டு அச்சடிக்கவே பணம் இல்லை.. உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்!!

கொழும்பு : இலங்கையில் வாக்குச்சீட்டு அச்சடிக்கவே பணம் இல்லை என்று கூறி உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இலங்கையில் 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து இருக்கும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த இயலாது என்று கூறியுள்ளது. வாக்குச்சீட்டு அச்சடிக்கவும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் இலங்கை அரசு முன்வரவில்லை என்று ஆணையம் கூறியுள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை காட்டி உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைப்பது நியாயமா என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்கவே நிதி போதவில்லை என்று அதிபர் ரணில் ஏற்கனவே கூறியிருந்தார். 2018ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பாலான இடங்களை பிடித்தது. தொடர்ந்து பொருளாதாரநெருக்கடி ஏற்பட்டு, மக்களின் எழுச்சி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.      


Tags : Sri Lanka ,Election Commission , Sri Lanka, Ballot, Money, Local Government Elections, Election Commission
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்