போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடிய ரவுடி.. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் காவல் ஆய்வாளர் : அயனாவரத்தில் பரபரப்பு!!

திருவள்ளூர் : சென்னை அயனாவரத்தில் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட ரவுடி தப்பி ஓட முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். அயனாவரத்தில் கடந்த 20ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் சங்கர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். கவுதம், பெண்டு சூர்யா, அஜித் ஆகிய 3 பேர் தாக்குதல் நடத்தியது விசாரணையின் தெரிய வந்ததை அடுத்து கவுதமும் அஜித்தும் நேற்று காலையில் பிடிபட்டனர். திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சூர்யாவை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

அயனாவரம் காவல் நிலையம் அழைத்து வரும் வழியில் தப்பி ஓட முயன்ற சூர்யா, கரும்பு ஜூஸ் கடை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கி உள்ளார். உதவி ஆய்வாளர் மீனா, சூர்யாவின் முழங்காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்துள்ளார். காவலர்களை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது உட்பட சூர்யா மீது 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த காவலர்கள் மற்றும் ரவுடி சூர்யாவுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: