×

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இனவெறி கொண்டு தமிழ்நாடு மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதா?: ஏபிவிபிக்கு திமுக இளைஞர், மாணவர் அணி கடும் கண்டனம்

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது இனவெறி கொண்டு, கொலை வெறி தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி.க்கு திமுக இளைஞர், மாணவர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெ.என்.யூ) பாஜவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு, 20ம் தேதி தமிழ் மாணவர்களின் மீது குறிவைத்து இனவெறி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி கண்டு தமிழ்நாடே கொந்தளித்து நிற்கிறது.
இதை கேள்விப்பட்ட திமுக தலைவர்-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். டெல்லி காவல்துறை, இந்த கொடும் நடவடிக்கைகளுக்கு, கண்களை மூடிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகப் பொதுவுடமை கட்சியை சார்ந்த மாணவர்களை முதலில் தாக்கிய, பாஜவின் ஏ.பி.வி.பி. அமைப்பு, இப்போது தமிழ்நாடு மாணவர்கள் மீது இனவெறி கொண்டு, கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறது. தன்னுடைய கொடூர சர்வாதிகாரத்தில் கோலோச்சுகிற பாஜ ஆட்சியின் தலைமையிடமாக விளங்கும் டெல்லி தலைமையிடத்திற்கே, தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் நிர்வாகிகளுடன் சென்று காயமுற்ற மாணவர்களுக்கு ஆறுதல் சொல்லி, கண்டனத்தை பதிவு செய்தது ஏ.பி.வி.பி.-க்கு பெரும் எதிர்வினை தந்தது. அண்மையில் குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. செய்தி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படத்தை திரையிட முயன்ற ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தின் மாணவர்களை தடுத்தி நிறுத்தி, பாஜ அரசின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை பொதுவுடமை கட்சிகள் உள்பட தி.மு.க. மற்றும் பல்வேறு ஜனநாய முற்போக்கு அமைப்புகள் கண்டித்தது. இந்நிலையில், ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மீது இனவெறி தன்மையோடு, கொலைவெறி தாக்குதலை ஏ.பி.வி.பி. அமைப்பு நடத்தியுள்ளது. மேலும், சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி மறுப்பு, மதவெறி எதிர்ப்பு என்று சமூக சீர்த்திருத்தத்தை, சமத்துவத்தை ஏற்படுத்தி தந்திருக்கக்கூடிய தந்தை பெரியாரின் படத்தையும், பொதுவுடமை தலைவர்களின் உருவப்படங்களையும் உடைத்து தங்கள் மதவெறி, இனவெறி, இந்துத்துவா அரசியலை ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தில் மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது ஏ.பி.வி.பி. அமைப்பு.

உலகத்தில் எந்தஒரு மூலையிலும் தமிழர்களுக்கு ஒரு இடையூறு, இன்னல் ஏற்படுமாயின் அதனை கண்டித்தும், தமிழர்களுக்கு கை கொடுத்து உயர்த்தும் திமுக தலைவர்- தமிழ்நாடு முதல்வரின் ஆணையேற்று, திமுக இளைஞர் அணியும், மாணவர் அணியும் ஒன்றிணைந்து பாஜவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு, தமிழ் மாணவர்களின் மீது நடத்தியுள்ள கொடுந்தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது. மாணவர்கள் மாறுபட்ட அரசியல் கருத்துகளுக்கு விவாதிப்பதும், கருத்தியல் போர் நடத்திட வேண்டுமென்பது அரசியல் மாண்பாகும்.  ஆனால், வெறுப்பு அரசியலையும், வெறிகொண்ட தாக்குதலையும் தன் சித்தாந்தமாய் கொண்டிருக்கும் பா.ஜ.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு குண்டர்களாய், ரவுடிகளாய் மாறி டெல்லியில் பயிலும் தமிழ் மாணவர்களை தாக்கியிருப்பதற்கு அவர்கள் தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும். தமிழ் மாணவர்கள் டெல்லியில் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், பா.ஜ.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும்.


திமுக என்றென்றும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்து தந்த அறவழியில் அறிவாயுதம் ஏந்தி போரிடுகிறது. சமூகநீதி, பெண்ணுரிமை, மொழி உரிமை, சாதி மறுப்பு, மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகிய கொள்கைகளை பா.ஜ.வின் தலைமைபீட செவிப்பறை கிழியும் வரை எதிரொலித்துக்கொண்டே இருக்கும். உடைக்கப்பட்ட தந்தை பெரியாரின் உருவப்படம் அங்கு மீண்டும் புதியதாய் காட்சியளிக்கிறது. மேலும், விரைவில், டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்க இருக்கிறோம். டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் பயிலும், தமிழ்நாட்டு மாணவர்களை இனவெறியோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் பா.ஜ.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மீது, பல்கலைக் கழக நிர்வாகமும், டெல்லி காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திமுக தலைவர்- தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஆதரவாய் களமாட திமுக இளைஞர் அணியும், மாணவர் அணியும் என்றென்றும் துணை நிற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu ,Delhi ,Jawaharlal Nehru University ,DMK ,ABVP , DMK youth and student group strongly condemn ABVP to commit murderous attack on Tamil Nadu students due to racism in Jawaharlal Nehru University, Delhi
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...