சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், பொன்னேரியில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் கரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், உ.வாசுகி, சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வரும், ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு’ மாநாடு சென்னையில் நடத்தப்படும், இந்த மாநாட்டிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரை அழைப்பது என மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும், ஏப்ரல் மாதத்தில் 2 நாள் பல்லாயிரக்கணக்கான இடங்களில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்த முடிவு செய்துள்ளது.
