×

புலியின் உடல் பாகங்களுடன் ‘பவாரியா’ கொள்ளை கும்பல்: சத்தியமங்கலத்தில் சிக்கியது

ஊட்டி:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசூர் கிராமத்தில் வடமாநிலத்தை  சேர்ந்த சிலர் தற்காலிக குடிசை அமைத்து தங்கியிருந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர்  மாறு வேடத்தில் சென்று அவர்கள் தங்குமிடத்தை சோதனை செய்தனர். இதில் ஒரு  சாக்கு பையில் புலித்தோல், புலிநகம், எலும்புகள் பதுக்கி வைத்திருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், 4 பேரையும்  கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தை  சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை  சேர்ந்த ராம்சந்தர் (50) என்பது தெரியவந்தது.

இவர்கள் நீலகிரியில் அடர்ந்த  வனப்பகுதியில் புலியை வேட்டையாடியதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து  கைது செய்யப்பட்ட 4 பேரையும் அழைத்து கொண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பக  வனத்துறையினர் நேற்று முன்தினம் ஊட்டிக்கு வந்தனர். அவர்கள் புலி வேட்டையாடியதாக  கூறப்படும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் சிறுத்தை உள்ளிட்டவற்றையும்  வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இவர்கள் வீடுகளை உடைத்து கொடூரமான முறையில் கொலை  செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் ‘பவாரியா’ கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள்  என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. புலி உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு சீன  மார்க்கெட்டில் நல்ல விலை உள்ளதால், இவற்றை வேட்டையாடுவதிலும் இந்த கும்பல்  ஈடுபடுவது வாடிக்கை என கூறப்படுகிறது.




Tags : Bavaria ,Sathyamangalam , 'Bavaria' gang with tiger body parts: Caught in Sathyamangalam
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...