×

விழுப்புரம் ஆசிரமத்தில் சிபிசிஐடி சோதனை: கூடுதல் ஆதாரம் சிக்கி உள்ளதாக எஸ்பி தகவல்

விழுப்புரம்: குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த வழக்கில் கூடுதல் ஆதரம் சிக்கியுள்ளதாக எஸ்பி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி நடத்திய அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், ஆதரவற்றவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் புகார் கூறப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் ஏற்றனர்.  இந்நிலையில், சிபிசிஐடி எஸ்பி அருண்பாலகோபாலன் தலைமையில் கூடுதல் எஸ்பி கோமதி உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினரும், தடயஅறிவியல் உதவி இயக்குநர் சண்முகம் தலைமையிலான போலீசாரும் நேற்று குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் ஆசிரமத்தின் அருகில் கொட்டப்பட்ட மருந்துகள், மாத்திரைகளை கைப்பற்றி சோதனைக்காக ஆய்வகத்துக்கு கொண்டு சென்றனர். ேமலும் அங்கு சந்தேகத்துக்கிடமாக கிடந்த பொருட்களையும் கைப்பற்றி ேசாதனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சோதனையில்  முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஆசிரமத்தின் அருகில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இச்சோதனைக்கு பின் முக்கிய ஆதாரங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கட்டிப்போட பயன்படுத்தப்பட்ட இரும்பு சங்கிலிகள், அடிக்க பயன்படுத்தப்பட்ட மூங்கில் பிரம்புகள், ரத்தம் படிந்த பாய், துணிகள்  மற்றும் மருந்து பொருட்களை கைப்பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக கொண்டு சென்றனர். சிபிசிஐடி எஸ்பி அருண்பாலகோபாலன் கூறுகையில், ‘ஆசிரமம் தொடர்பாக புதிதாக நேற்று  எப்.ஐ.ஆர் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை  தொடங்கியுள்ளோம். குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

 9 பேரை காவலில் எடுக்க முடிவு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற உள்ளனர். தொடர்ந்து, வெளிமாநில காப்பகத்துக்கும் சென்றும் விசாரணை நடத்த உள்ளனர். முன்னதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தும் விசாரணைக்குப்பிறகு வெளி மாநிலங்களுக்கு இதுவரை எத்தனை பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக எவ்வளவு பணம் வாங்கினார்கள், பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரம் தெரியவரும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.



Tags : CBCID ,Villupuram , CBCID raid at Villupuram ashram: SP informs that additional evidence has been caught
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...