×

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குரூ.2 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடியிடம் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் உறுதி

புதுடெல்லி,பிப்.22: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க தயாராக இருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்தார். மணிலாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய வளர்ச்சி  வங்கி தலைவர் மசட்சுகு அசகாவா இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர்  மோடியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் பல்வேறு உட்கட்டமைப்புகளை மேற்கொள்ள அடுத்த 5 ஆண்டு திட்டமாக ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  

மோடியுடன் நடந்த இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு, காலநிலை நடவடிக்கைகளுக்கு  ஆசிய வளர்ச்சி  வங்கி சார்பில் அவர் ஆதரவு தெரிவித்தார். இதை தொடர்ந்து பிரதமர் மோடியின் திட்டத்தின்கீழ் பின்தங்கிய மாவட்டங்களில் கட்டமைப்பை உருவாக்குதல், புதிய நகரங்களை உருவாக்குதல், உள்நாட்டு வளங்களை திரட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை  அளிக்க இந்த நிதியை வழங்க இருப்பதாக மசட்சுகு தெரிவித்தார்.

மேலும் ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த  மசட்சுகு ஜி 20 நிகழ்ச்சிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவை அவர் தெரிவித்தார்.  இந்தியாவில் தற்போது போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, மனித வளம், விவசாயம், இயற்கை வளங்கள், நிதித் துறை ஆகியவற்றில் சுமார் 64 திட்டங்களில் ரூ.1.3 லட்சம் கோடி நிதி உதவியை ஆசியவளர்ச்சி வங்கி அளித்துள்ளது. அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மசட்சுகு அசகாவா சந்தித்து பேசினார்.



Tags : India ,Asian Development Bank ,PM Modi , Rs 2 lakh crore loan to India in next 5 years: Asian Development Bank chief assures PM Modi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!