திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கௌ.மெல்கி ராஜா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், ஆ.மணி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் சீ.காந்திமதிநாதன் கண்டன உரையாற்றினார். இதில், பல்வேறு சங்க மாவட்ட நிர்வாகிகள் ஏ.மணிகண்டன், கோ.இளங்கோவன், ஜெய்ஹிந்த், பிரபு, சந்தானம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை வட்டம் விட்டு வட்டாரம் பணியிட மாறுதல் செய்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் அதே வட்டாரத்தில் பணி வழங்க வேண்டும், மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் பணி மாறுதல் வழங்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்களை நடத்துவதை கைவிட வேண்டும்,
வாரத்தில் 3 நாட்கள் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் கா.மீரா கண்ணன், எஸ்.ஜார்ஜ், தேவ சகாயம், கே.ஜெய்சங்கர், கா.முனுசாமி, ஆர்.இ.சோமசேகர், பிரசாத், சரவணமூர்த்தி, நா.சீனிவாசன், பரசுராமன், இரா. ஸ்ரீராம் காந்தி, ச.பாரி ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இறுதியில், மாவட்ட பொருளாளர் ம.மகேந்திரன் நன்றி கூறினார்.
