பள்ளிப்பட்டு: கோடையில் கிராமமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிப்பட்டு ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. பொன். ஜான்சிராணி விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பொன்.சு.பாரதி முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செ.செ.சேகர், அ.மணிசேகர் வரவேற்றனர். ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்று வரவு செலவு கணக்கு தொடர்பாக விவாதித்தனர். எதிர்வரும் கோடையில் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பெயர் பலகையை அமைக்க வேண்டும். ஒன்றியக் குழு துணைத்தலைவர் பொன்.சு.பாரதி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து ராமசமுத்திரம், கீச்சலம், வி.ஜி.ஆர். கண்டிகை கிராமங்களில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதால், முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் விநாயகம்மாள் கேட்டுக்கொண்டார்.
ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை அதிகாரிகள் முறையாக ஒன்றியக் குழு தலைவர் பார்வைக்கு கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய குழுத் தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உஷாபிரியா ஸ்டாலின், நதியா நாகராஜ், சுகுணா நாகவேலு, முத்துரெட்டி, பத்மாவதி கோவிந்தராஜ், சேகர், முத்துராமன், விநாயகம்மாள், புஷ்பா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
