×

சமூக வலை தளங்களில் மோதல் கர்நாடக பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் பெண் அதிகாரியும், ஐபிஎஸ் பெண் அதிகாரியும் பரஸ்பர குற்றம்சாட்டிய சம்பவத்தில் மோதல் முற்றிய நிலையில் இரு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து கர்நாடக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  அவர்களுக்கு மாற்றுப் பணி ஒதுக்கப்படவில்லை.  கர்நாடக மாநிலத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையராக இருப்பவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. இதே போல் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வழங்கிய சலுகைகள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபா மவுத்கல். இவர் தற்போது கைவினைப்பொருள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இந்த இரு பெண் அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி சண்டை போட்டுக்கொண்டனர். இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபா, ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.  இவர்களது இந்த மோதல் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை செயலாளர் வந்திதா சர்மா மற்றும் டிஜிபி பிரவீண் சூட் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இரு பெண் அதிகாரிகளும் தலைமை செயலாளர் முன்பு நேற்று முன் தினம் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் ேநற்று கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநில அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்ட இரு பெண் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபாவின் கணவரும், சர்வே, செட்டில்மென்ட், நில ஆவணத்துறை ஆணையராக பணியாற்றி வரும் முனீஸ் மவுத்கலை நிர்வாக சீர்திருத்த துறைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை  ஐபிஎஸ் அதிகாரி  ரூபா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
* இருவரிடமும் தலைமை செயலாளர் நேற்று முன்தினம் விசாரணை.
* இரு பெண் அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
* இருவரும்  காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
* ஐபிஎஸ் அதிகாரி  ரூபாவின் ஐஏஎஸ் கணவரும் இடமாற்றம்.

Tags : Controversy on social networking sites Karnataka woman IAS, IPS officer transferred
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...