×

மாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி விஜயராகவ பெருமாள் கோயில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம்: கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ மரகதவள்ளி சமேதஸ்ரீ விஜயராக பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 24ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி விஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாபரணங்கள், மலர் மாலைகள் அணிவித்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து, மாவிலை தோரணங்கள், பூமாலைகள், வாழைமரம் கட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினார்.

பின்னர், மேளதாளங்கள் முழங்க வேதபாராயண குழவினர் பாடிவர, கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கர கோஷமிட்டவாரு பக்தர்கள் தேரின் வடத்தினை பிடித்து இழுத்து செல்ல  விஜயராகவ பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தேர் உற்சவத்தில் ஏராளமான பஜனை கோஷ்டிகள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை மனம் உருகி பாடியபடி சென்றனர். மேலும், வழிநெடுங்கிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து தேரில் எழுந்தருளி வந்த விஜயராகவ பெருமாளுக்கு கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கர கோஷத்துடன் கற்பூர ஆரத்தி சமர்பித்து மனமுருகி வேண்டி விரும்பி சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

தேர் உற்சவத்தில் காஞ்சிபுரம், திருப்புட்குழி, பாலுசெட்டிசத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு  சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை  பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தை சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Vijayaragava Perumal Temple Chariot Festival ,Masi Month Brahmotsavam ,Swami , Vijayaragava Perumal Temple Chariot Festival on Masi Month Brahmotsavam: Crowds of Devotees Visit Swami
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்