×

நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் தெருவிளக்கு, எல்இடி மின்விளக்குகள்: பணிகள் தீவிரம்

சென்னை: சென்னையில் பெண்களின் பாதுகாப்பு கருதி, நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் ரூ.60.84 கோடி மதிப்பில் தெருவிளக்கு, எல்.இ.டி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரை  பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள  பள்ளிகளில் சிசிடிவி கேமிரா அமைத்தல், தெருவிளக்கு உள்ளிட்ட திட்டங்களை சென்னை  மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சி  பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை அமைக்கப்படுகிறது.   

இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கருதி நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களான 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய வளர்ச்சியடைந்த பகுதிகள், காவல்துறையினரால் கண்டறியப்பட்ட பகுதிகள், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதிகளில் புதியதாக தெருவிளக்கு மின்கம்பங்கள் அமைத்தல் மற்றும் அதில் எல்.இ.டி மின் விளக்குகள் அமைத்தல் பணிகளும், துருப்பிடித்த மற்றும் பழுதான தெரு விளக்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ.60.84 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 1,104 தெருவிளக்கு மின் கம்பங்கள் அமைக்கும் பணி, வெளிச்சம் குறைவாக கண்டறியப்பட்ட பகுதிகளில் 696 தெருவிளக்கு மின்கம்பங்களும், கூடுதலாக தேவைப்படும் இடங்களில் 5,259 தெருவிளக்கு மின் கம்பங்களும் மற்றும் துருப்பிடித்த தெவிளக்கு மின் கம்பங்களுக்கு பதிலாக 1,997 தெருவிளக்கு மின்கம்பங்களும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் கட்டமாக கூடுதல் விளக்குகளுக்காக 447 தெருவிளக்கு மின் கம்பங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் பாதைகளில் 395 மின்கம்பங்கள் என மொத்தம் 9,898 தெரு விளக்கு மின்கம்பங்களும், 10,077 எல்.இ.டி மின் விளக்குகளும் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதில் முதற்கட்ட பணியில் இதுவரை 8,308 தெரு மின் விளக்கு கம்பங்கள் நடப்பட்டு, 6,311 எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. முதற் கட்டப்பணிகள் மார்ச் மாத இறுதிக்குள்ளும், இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் முடித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* பெண்களின் பாதுகாப்பு
டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இதைத் தொடர்ந்து, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய,  2013ல், நிர்பயா திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்திற்கு  முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பின், 2,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த நிதியின் வாயிலாக, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய பெருநகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

* பல்வேறு திட்டங்கள்
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத 617 இடங்கள் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல். அவசரகால பட்டன், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துதல் அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கு கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு படை அவரச கால தொலைபேசி மற்றும் மொபைல் ஆப் வசதி, பெண்களுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல் இதுபோன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Chennai , Street lights, LED lights at a cost of Rs 60 crore in Chennai under Nirbhaya Nidhi scheme: work in full swing
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...