×

வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக மோசடி: நாம் தமிழர் கட்சியின் ‘லஞ்ச ஒழிப்பு’ நிர்வாகி கைது

சீர்காழி: வீட்டுமனை பட்டா வாங்கித் தருவதாக 18 பேரிடம் ரூ.20 ஆயிரம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஊழல் கையூட்டு(லஞ்சம்) ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமம் சுனாமி நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 825 பேருக்கு ஏற்கனவே வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்டோர் விடுபட்டனர். இவர்கள் வீடு கேட்டு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இவர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டப்படவில்லை.

இந்நிலையில் சீர்காழி அருகே பழையார் சுனாமி நகரை சேர்ந்த செண்பகசாமி(40), அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்தனர். தலா ரூ.20 ஆயிரம் வீதம் 18 பேரிடம் இவ்வாறு வசூலித்தனர். ஆனால் பட்டா வாங்கி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புதுப்பட்டினம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து செண்பகசாமியை இன்று கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள அண்ணாதுரையை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செண்பகசாமி நாம் தமிழர் கட்சியின் ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil , Fraud to buy house plot: Naam Tamilar Party's 'anti-bribery' executive arrested
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...