×

உத்தரபிரதேசத்தில் இருந்து சொகுசு காரில் வந்து நீலாங்கரையில் 3 தொழிலதிபர் வீட்டில் கைவரிசை வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது

துரைப்பாக்கம்: உத்தரபிரதேசத்தில் இருந்து சொகுசு காரில் வந்து நீலாங்கரையில் 3 தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், பிரபல தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு சொகுசு காரில் வந்த 3 பேர், நீலாங்கரை, புளு பீச் சாலை, கேஷ்சுரினா டிரைவ் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீடு, டிவிஎஸ் குழும உரிமையாளர் வீடு உள்ளிட்ட அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்து விட்டு வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் முக்கிய பிரபலங்கள் வசிக்கும் பகுதியில், அதுவும் பாதுகாப்பு அதிகளவு உள்ள பகுதியில் துணிச்சலாக நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தோல் தொழிற்சாலை உரிமையாளர் நாயர் சுல்தான் (45) வீட்டில் ஒரு ஜோடி செருப்பு மற்றும் பர்சில் இருந்த பணம் ஆகியவை கொள்ளை போனதாக நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் எஸ்ஐ திருஞானம் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளை கும்பல், கொள்ளையடிக்கும் முன்பு விலை உயர்ந்த சொகுசு காரில் வந்து நோட்டமிட்டு பின்னர் இரவு நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் புகுந்துள்ளனர்’ என்பது தெரியவந்தது. பின்னர் அந்த காட்சிகளில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து முகவரியை விசாரித்தனர். அது போலியானது என தெரியவந்தது. பின்னர் ஒவ்வொரு சிசிடிவியாக பார்த்தனர். திருவள்ளூர் அருகே சோழவரம் சுங்கச்சாவடியை கடந்தபோது வாகன எண் மாற்றப்பட்டுள்ளது தெரியந்தது.

அதை வைத்து தீவிரமாக தேடியபோது வாகனத்தின் உரிமையாளர் தனபால் சிங் என்பதும் அவரை கண்டறிய டெல்லிக்கு சென்று விசாரித்தனர். அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள சுனில் குமார் யாதவ் (28) என்பவருக்கு காரை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் உத்தரபிரதேசத்திற்கு தனிப்படையினர் விரைந்து சென்று, கொள்ளையில் ஈடுபட்ட புனித் குமார், அவரது சகோதரரான  ரமேஷ் குமார் யாதவ் (30) ஆகியோரை அங்குள்ள போலீசாரின் உதவியுடன் திரைப்பட பாணியில் காரில் துரத்தி சென்று துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குற்றவாளிகள், உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் இருந்து சொகுசு காரில் சென்னைக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் முக்கிய குற்றவாளியான பீகாரை சேர்ந்த இர்பான் (27) மீது பல்வேறு மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரது மனைவி, பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். சொகுசு காரில் சென்று சொகுசு பங்களாக்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் இர்பான், அந்த பணத்தின் மூலம் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கிராமத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்து வந்துள்ளார். டெல்லி ஆக்ரா, அஜ்மீர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு சொகுசு கார்களில் சென்று இர்பான் கொள்ளையடித்துள்ளார். மேலும் சுனில் குமார் யாதவ் மீது இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. 2019ம் ஆண்டு முதல் கொலை வழக்கில் சிறையில் இருந்தார். 2022ம் ஆண்டு கொள்ளை வழக்கில் சிறை சென்ற இர்பானுடன் சுனில் குமார் யாதவ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இருவரும் ஒன்றிணைந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். கூகுள் மூலம் தமிழகத்தில் வசதி படைத்தவர்களின் வீடுகளை பார்த்து கைவரிசையை காட்டியுள்ளனர். குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியை தேர்ந்தெடுத்து உத்தரபிரதேசத்தில் இருந்து சொகுசு காரில் சுனில் குமார் யாதவ், இர்பான் மற்றும் சுனில் குமார் யாதவின் டிரைவர் புனித் குமார் (26) ஆகியோர் 3 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து புனித் குமார், ராஜேஷ்குமார் யாதவ் ஆகியோரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான இர்பான், சுனில் குமார் யாதவ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : Northern State ,Neelangarai ,Uttar Pradesh , 2 North State robbers arrested in Neelangarai house of 3 businessmen who came from Uttar Pradesh in a luxury car
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்