×

மீண்டும் சொல்கிறோம்; போரைத் தொடங்கியது அவர்கள்தான்; நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பிரயோகித்தோம்: ரஷ்ய அதிபர் புதின் பேச்சு

மாஸ்கோ: மீண்டும் சொல்கிறோம்; போரைத் தொடங்கியது அவர்கள்தான்; நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பிரயோகித்தோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டுக்கு எதிராக போர் தொடங்கி ஓராண்டு நிறைவடையவுள்ளது. இதனிடையே நாடாளுமன்றத்தில் ரஷ்ய அதிபர் புதின் பேசினார். அப்போது, கடினமான, வேதனையான, அதேநேரத்தில் நமது நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்திற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் நாம்  இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உக்ரைன் உடனான பிரச்சனையை அமைதியான வழியில் தீர்க்க எல்லா வகையிலும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால் எங்கள் முதுகுக்கு பின்னால் வேறு ஒரு சதித்திட்டம் தீட்டப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பகடைக்காயாக உக்ரைன் நாட்டை பயன்படுத்துகின்றன.

நாங்கள் திரும்பவும் சொல்கிறோம், அவர்கள்தான் போரை தொடங்கினார்கள். நாங்கள் போரை நிறுத்த பலத்தை பிரயோகப்படுத்தினோம். நம்மைப் பொறுத்தவரை இது நமது இருத்தலுக்கான போர். நமது இருப்பு தற்போது ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ரஷ்யாவை தோற்கடித்துவிட முடியும் என்று தப்புக் கணக்கு போட்டு இந்த மோதலை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். ரஷ்யாவை ஒருபோதும் யாராலும் வீழ்த்த முடியாது என புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உடனான 1991 ஆயுத குறைப்பு உடன்படிக்கையில் இருந்து விலகுவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர் விவரம்:

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைன் நாடே உருக்குலைந்துள்ளது. பல நகரங்களில் ஒட்டுமொத்த கட்டமைப்புகள் நாசமாக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மேற்கத்திய நாடுகளில் நீண்ட காலமாக நடக்கும் போர் இது.

வரும் 24ம் தேதியுடன் இந்த போர் தொடங்கி ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று திடீரென உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு பயணம் செய்தார். மரின்ஸ்கி அரண்மனையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பைடன், உக்ரைனுக்கு கூடுதலாக 50 பில்லியன் டாலருக்கான ஆயுதங்களை வழங்கி உதவுவதாக அறிவித்தார்.


Tags : President ,Buddin , Ukraine, war, power, Russian President Putin
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...