விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளது என சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார். ஆசிரமத்தில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் சிபிசிஐடி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆசிரமத்தில் இருந்த ஆதரவற்றவர்கள் 15 பேர் மாயமானதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம உரிமையாளர் உட்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டார். இன்று காலை முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள், ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர். சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் மூன்று மணி நேர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளது.
ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். ஆசிரம வழக்கில் ஆதாரங்களையும், சாட்சிகளையும் கொண்டு விசாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வழக்கின் முன்னேற்றம் குறித்தும், விசாரணை குறித்தும் அறிக்கைகள் கொடுக்கப்படும். முதற்கட்டமாக 4 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
