×

திருவிழாக்களின்போது எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது?: அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: திருவிழாக்களின்போது எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருவிழாக்களின்போது உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? இதற்கான அரசாணை ஏதேனும் உள்ளதா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தஞ்சை கும்பகோணத்தில் மாசி மகாமகம் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.  

இந்த ஆண்டிற்கான கும்பகோணம் மாசி மகாமகம் திருவிழா மார்ச் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கென கும்பகோணத்தில் உள்ள 12 சிவாலயங்கள், 5 பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. இந்த விழா மிகவும் பிரசித்திபெற்ற வரலாற்று விழாவாக இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். அந்த நேரத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள மதுபான கடைகளை மூடவும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கக்கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி அமர்வு, திருவிழாக்களின் போது உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? உள்ளூர் விடுமுறை விடப்படுத்தற்கென தனி அரசாணை ஏதும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் அரசாணையின் அடிப்படையில் தான் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை, மதுபான கடைகள் மூடப்பட்டது. மதுரையிலும் இதேபோன்று திருவிழாக்களின் போது நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் இது தொடர்பாக அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


Tags : ICourt Branch questions , Festival, Local Holiday, Government, iCourt branch
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...