×

கடவூர், தோகைமலை பகுதிகளில் மரிக்கொழுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்-தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை

தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் மரிக்கொழுந்து சாகுபடியை விவசாயிகள் கணிசமாக செய்து வருகின்றனர். மரிக்கொழுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் வழங்கி உள்ளனர்.மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரம் ஆகும். இந்த செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய்களுக்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. மாலைகள் மற்றும் மலர் செண்டுகளில் இதனுடைய நறுமணத்திற்காக மரிக்கொழுந்து இலைகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப்பொருட்களுக்கு நறுமணம் ஊட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி செய்கின்றனர். தற்போது கரூர் மாவட்டத்தில் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் கணிசமாக மரிக்கொழுந்து பயிரிடப்பட்டு வருகின்றனர். மரிக்கொழுந்து ஒரு வருடம் வாழும் வகையை சார்ந்த பயிர் ஆகும். 45 முதல் 80 செமீ வரை உயரத்துடன் நேராக வளரக்கூடிய இந்த பயிர்கள், சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது.வளம் செறிந்த செம்மண் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்றாக வளரக்கூடியது.

மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி போன்ற இயற்கை சூழல்கள் நல்ல விளைச்சலை ஏற்படுத்தும். மரிக்கொழுந்து விதைக்கப்பட்ட நாட்களில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யப்படுவதால் எந்த பருவத்திலும் சாகுபடியை செய்யலாம். ஆனால் வாசைன எண்ணெய்க்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து பயிர்கள் நவம்பர், மாதம் முதல் பிப்ரவரி, மார்ச்ச வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் - மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

மரிக்கொழுந்து செடிகள் விதை மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலான பழைய விதைகள் முளைப்பு தன்மையை இழந்து விடுகிறது. நாற்றங்கால் பாத்திகள் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 5 கிலோ மக்கிய தொழு உரம், 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டு மண்ணோடு நன்னறாக கலக்க வேண்டும். ஒரு எக்டரில் நடவு செய்ய 1.5 கிலோ விதையை 500 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன்பாக (1 கிலோ விதைக்கு 50 கிராம் சுடோமோனாஸ்) விதைகளை விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

விதைகளை 10 கிலோ மணலுடன் கலந்து சுமார் 3 கிராம் விதை 1 சதுர மீட்டர் பரப்பளவில் விழுமாறு தூவி விதைக்க வேண்டும். பின்னர் விதைகளை மணல் தூவி மூடுவதோடு, பூவாளி கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 3 அல்லது 4 வது நாட்களில் விதைகள் முளைக்க தொடங்கும். விதைகளை 48 மணி நேரம் ஈரத்துணியில் ஊறவைத்து முளைகட்டியும் விதைக்கலாம்.

மரிக்கொழுந்து பயிருக்கு எக்டருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழு உரம், 125 கிலோ தழை சத்து, 125 கிலோ மணிசத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து உரங்களை பயன்படுத்த வேண்டும். முழு அளவு நன்றாக மக்கிய தொழு உரம், மணிசத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25 வது நாளில் முதல் மேல் உரமாக இட வேண்டும். பொதுவாக இந்த செடிகளை பூச்சி நோய்கள் தாக்குவது இல்லை. விதைக்கப்பட்ட 5 முதல் 6 மாதங்கள் வரை இந்த பயிரை அறுவடை செய்யலாம்.

விதைக்கப்பட்ட 45 வது நாளில் முதல் அறுவடையும், அதனை தொடர்ந்து 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடையை செய்யலாம். பிப்ரவரி கடைசி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை தரையில் இருந்து சுமார் 10 செமீ உயரம் விட்டு தழை வெட்ட வேண்டும். ஒரு எக்டரில் இருந்து 17 பசுந்தழையும், இதில் இருந்து 12.50 கிலோ வாசைன எண்ணேயும் கிடைக்கிறது என்று முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ஆகவே மரிக்கொழுந்து பயிர் சாகுபடிகள் செய்யும் விவசாயிகள் மேற்படி ஆலோசனைகள் மூலம் சாகுபடி செய்தால் அதிகமான மகசூல் பெற்று லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Marikolundu ,Kadavur ,Tokaimalai , Thokaimalai: Farmers have done significant cultivation in Kadavur and Thokaimalai union areas of Karur district.
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...