×

பல்வேறு கிராமங்களில் இருந்து கொட்டகுடி ஆற்றில் கலக்கும் கழிவுநீர்-தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா...

போடி : பல்வேறு கிராமங்களில் இருந்து வெளியேறி ஒட்டுமொத்தமாக கொட்டகுடி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று உருவாகி வருகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பல்வேறு கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கொட்டகுடி ஆற்றில் கலப்பதால் ேநாய்த்தொற்று ஏற்பட்டு வருவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொட்டகுடி - குரங்கணி முட்டம் சாலையில் சாம்பலாற்று தடுப்பணை உள்ளது. பருவமழை காலங்களில் மலைப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்வதால் சாம்பலாற்று தடுப்பணை தாண்டி பெரும் வெள்ளம் பெருக்கெடுப்பது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் அங்கிருந்து மறுகால் பாய்ந்து வரும் தண்ணீர் மற்றும் வழியில் உள்ள பல்வேறு பகுதிகளில் உருவாகும் சிற்றோடைகள் கொட்டகுடியாற்றில் சேர்கிறது.

இந்த ஆற்று நீர் குரங்கணி, கொட்டக்குடி கிராமங்களை கடந்து கொம்புதூக்கி அய்யனார் கோயில், பிச்சாங்கரை, முந்தல், மேலப்பரவு, கீழப்பரவு, கூலிங்காறு, மூக்கறை பிள்ளையார் தடுப்பணை, ரெட்டை வாய்க்கால், புதூர், சன்னாசிபுரம் செட், வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், தேனி நுழைவாயில் பெரும் பாலத்தினை கடந்து மூல வைகையாற்றுடன் சேர்ந்து பின்னர் வைகை அணையில் சென்று கலக்கிறது.

குரங்கணியிலிருந்து புறப்பட்டு தேனி வரை சென்றடையும் கொட்டகுடி ஆறு சுமார் 27 கி.மீ நீளமுடையதாக அமைந்துள்ளது. இதன்படி வழியில் உள்ள கிராமங்களான அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம் காலனி, பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவு நீர் கால்வாய்களும் கொட்டகுடி ஆற்றில் வந்து சேர்கிறது.
இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் முற்றிலும் மாசு படிந்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அத்துடன் இந்த தண்ணீரால் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாகி வருகிறது. எனவே கொட்டகுடி ஆற்றில் பல்வேறு கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kottagudi river , Bodi: Due to the mixing of sewage from various villages in the Kottagudi river, the disease is spreading.
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...