×

கடமலை - மயிலை ஒன்றியத்தில் மழை இலவம் மரங்களில் காய்கள் வெடிப்பால் வீணாகும் பஞ்சு-விவசாயிகள் கவலை

வருசநாடு : கடமலை - மயிலை ஒன்றியத்தில் இலவம் மரங்களில் காய்கள் பறிப்பதற்கு முன் வெடித்து பஞ்சு காற்றில் பறப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கடமலை - மயிலை ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த சாரல் மழையில் காரணத்தால் இலவம் மரங்களில் பிஞ்சுகளின் உற்பத்தி அதிக அளவில் காணப்பட்டது. மேலும் அவற்றின் ெகாள்முதல் விலையும் அதிக அளவில் இருந்ததால் விவசாயிகள் இலவம் பிஞ்சுகளை சேகரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் இலவம் பிஞ்சுகளை மரத்தில் இருந்து பறிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடமலை - மயிலை ஒன்றிய கிராமங்களில் கனமழை பெய்தது. அதன் காரணமாக தற்போது இலவம் காய்கள் மரத்திலேயே வெடிக்கத் தொடங்கியுள்ளது.இதனால் காய்களில் உள்ள பஞ்சு காற்றில் பறந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

மேலும் இலவம் காய்கள் அனைத்தும் வெடிக்கும் முன்பு அவற்றை பறித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான பணிகளில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில் இலவம் பஞ்சு பறிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் கூடுதல் தொகை கொடுத்து வெளியூர்களில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில், மழையால் இலவம் பிஞ்சுகள் உற்பத்தி அதிகரித்த நிலையில், தற்போது அதே மழையால் இலவம் காய்கள் சேதமடைந்து வருகிறது. மேலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இலவம் பஞ்சுவின் விலையை விட அதனை மரங்களிலிருந்து பறிக்க அதிக பணம் செலவாகிறது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மிகக் குறைந்த அளவில் மட்டுமே லாபம் கிடைக்கும் மேலும் இலவம் பஞ்சின் விலையை கூட்டவும், குறைக்கவும் இடைத்தரகர்கள் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இலவம் பஞ்சுக்கு நிரந்தர விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Kadamalai-Maylai , Varusanadu: Farmers in Kadamalai-Mayilai union due to bursting of free fruit before harvesting and fluff flying in the wind.
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு