விழுப்புரம் மாவட்டத்தில் குற்றப்பின்னணி கொண்ட வடமாநிலத்தவர் வருகை அதிகரிப்பு

* பொதுமக்கள் அச்சம்

* காவல்துறை கணக்கெடுப்பு நடத்தி கண்காணிக்குமா?

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் குற்றப்பின்னணி கொண்ட வடமாநிலத்தவர்  வருகை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வடமாநிலத்தவர்கள்  தங்கியிருக்கும் பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி அவர்களை  கண்காணிக்கவேண்டுமென காவல்துறையினருக்கு சமூகஆர்வலர்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் ரீதியாக வட மாநிலத்தை  சேர்ந்த தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளது.

அதில், குற்றப்பின்னணி கொண்ட  நபர்களால், பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடப்பதோடு, அவர்கள் தப்பியோடி  விடுவதால் போலீசாருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு வருகிறது. அதிக தொழில்  நிறுவனங்கள், வேலைவாய்ப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதன்மை இடத்தில்  இருக்கும் தமிழகத்திற்கு பிற மாநிலத்தவர்களின் வருகை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களைத்தொடர்ந்து  பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கணிசமாக வடமாநிலத்தொழிலாளர்கள் இருப்பதை  காணமுடிகிறது.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் துணிக்கடைகள்,  மால்களில் காவலாளிகளாக வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், தற்போது வீதிக்குவீதியில்  உள்ள நூடுல்ஸ் கடைகள், ஓட்டல்கள் என அவர்கள் இல்லாத இடமே கிடையாது என்ற  நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் நகரிலும் பொம்மைகள் விற்பனை, இரும்பு  பொருட்கள் விற்பனை, போர்வைகள் விற்பனை என்று பல்வேறு பொருட்கள்  விற்பனையிலும் வடமாநிலத்தவர்கள் கூட்டம், கூட்டமாக இறக்கப்பட்டுள்ளனர்.

 நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இருசக்கர வாகனங்களில்  வடமாநிலத்தொழிலாளர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதேபோல்,  விக்கிரவாண்டி - கும்பகோணம், விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை அமைக்கும்  பணிகள் நடந்துவரும் நிலையில் இதில் வடமாநிலத்தொழிலாளர்களே ஈடுபட்டுள்ளனர்.  ஆங்காங்கே குடிசைகள் போட்டு நிரந்தரமாக தங்கியுள்ள அவர்கள்  கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை திருடி இறைச்சிக்காக சமைத்து  சாப்பிடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகவும்  புகார்கள் எழுந்துள்ளன.

தற்போது மாவட்டத்தில் 30 சதவீத அளவிற்கு  வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் போன்ற  மாநிலங்களில் இருந்து கூலி வேலைக்காக வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலைக்காக வரும் வட மாநில  தொழிலாளர்களில், குற்றப்பின்னணி கொண்ட நபர்களின் வருகையும்  அதிகரித்துள்ளது. ஆங்காங்கே நடக்கும் வங்கி கொள்ளை, வீடு புகுந்து  திருட்டு, நகைபறிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களாக  கூலிவேலைக்கு வந்த வட மாநில தொழிலாளர்கள் இருக்கின்றனர். கடந்த சில  நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் நடந்த  ஏடிஎம் கொள்ளையில் அரியானாவை சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில்  படிப்படியாக அதிகரித்து வரும் வடமாநிலத்தொழிலாளர்களால் பெரும்  அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இவர்களில் குற்றப்பின்னணி கொண்ட நபர்கள்  இருக்கின்றனரா? என போலீசார் தொடர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அவர்கள்  தங்கியிருக்கும் பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி உரிய விவரங்களை அந்தந்த  காவல்நிலையத்தில் சேகரித்து வைக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில்  திருட்டு போன்ற அசம்பாவித சம்பங்கள் நடக்காமலும், நடந்தால் உடனடியாக  குற்றவாளிகளை கண்டறியவும் உதவியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குறைவான கூலி, நிறைவான சோறு

வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்புக்கு  குறைவான கூலி,  நிறைவான வேலை, உணவு ஆகியவை முக்கிய காரணம். உ.பி., ராஜஸ்தான், ஒடிசா,  சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அங்கு  சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் தொழிலாளர்கள், தமிழகத்திற்கு வந்து குறைந்த  கூலிக்கு வேலை பார்க்கின்றனர். இங்குள்ள தொழிலாளருக்கு ரூ.500 கூலி கொடுக்க  வேண்டும் என்றால், வட மாநில தொழிலாளி ரூ.300க்கு வேலை பார்க்கிறார்.

இதனால்,  கட்டுமான தொழில், கார் பட்டறை, வெள்ளிப்பட்டறை, தறிக்கூடங்கள்,  கட்டிடப்பணிகள், மேம்பாலப்பணிகள், ஓட்டல்கள் என அதிகப்படியான வட மாநில தொழிலாளர்களை இங்குள்ள நிறுவனத்தார் சேர்க்கின்றனர். ஆனால், சில  குற்றப்பின்னணி கொண்ட தொழிலாளர்களால் பெரிய இழப்பு ஏற்படும் என்பதை அறியாமல் செய்கின்றனர். எனவே வேலைக்கு சேரும் அனைவரது பின்னணியையும் தொழில்  நிறுவனத்தார் அறிவதே சிறந்தது.

அச்சுறுத்தல்களுக்கு வழக்குகளே ஆதாரம்

வடமாநிலத்தவர்களின் அச்சுறுத்தல்களுக்கு அவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகளே ஆதாரம் என்கின்றனர் சமூகஆர்வலர்கள். வடமாநிலத்தவர் வருகையால் மாவட்டத்தில் வசிப்போரின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஏடிஎம் கொள்ளை, ரயில்பெட்டிகளில்  பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளை, நகைக்கடை கொள்ளை, வங்கிகளில் துளையிட்டு  கொள்ளை போன்ற சம்பவங்கள் மற்றும் அதை தடுக்க முயன்ற காவலாளிகள்,  உரிமையாளர்கள் கொல்லப்படுவதும் வடமாநிலத்தவர்களால்தான் என்பதற்கு  தமிழக காவல்துறையில் பதிவாகியுள்ள வழக்குகளே ஆதாரம்.

Related Stories: