×

தர்மபுரி மாவட்டத்தில் 8 வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

*இரண்டாம் கட்ட பணி மார்ச் 1ல் துவக்கம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 8 வனச்சரகத்தில், 400 பேர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் இரண்டாம் கட்டமாக நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி, வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு, நீர் பறவைகள் மற்றும் நிலப் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

நீர் பறவைகளின் கணக்கெடுப்பு, கடந்த 28ம் தேதி  மற்றும் 29ம்தேதி ஆகிய தேதிகளிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பு மார்ச் முதல் வாரத்தில் 2 நாட்களும் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் நீர் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. தர்மபுரி, பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை  ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட ஈர நிலத்தில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த 28 மற்றும் 29ம்தேதிகளில் நடந்தது.

தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி உத்தரவின் பேரில், மாவட்ட வன அலுவலர் அப்பாலநாயுடு மேற்பார்வையில், அந்தந்த வனச்சரகர் தலைமையில், இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. தர்மபுரி வனச்சரகர் அருண்பிரசாந்த் தலைமையில், வனத்துறையினர் 10 பேர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 15 பேர் என 25 பேர் கொண்ட 2 குழுவினர் என மொத்தம் 50 பேர் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் வத்தல்மலை, பென்னாகரத்தில் கோட்டான்பள்ளி ஆகிய இரு இடங்களின் ஈரப்பத நிலப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கோட்டான்பள்ளி இடத்தில் கொக்கு - 304, நாரை - 268, நீர்கோழி - 15, கானாங்கோழி - 15, மயில் - 15 மற்றும் பல ரக பறைவைகள் கணக்கெடுப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இதே போல் வத்தல்மலையில் மைனா - 25, மீன்கொத்தி - 30, மரம்கொத்தி -5, ஆண் மயில் -5, பெண் மயில்- 4 உள்ளிட்ட பல வகையான பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், பறவைகள் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காலக்கட்டத்தால் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது 8 வனச்சரகத்திலும், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 400 பேர் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 8 வனச்சரகத்திலும், மொத்தம் 16 ஈரப்பத இடங்களில் 2,400 கொக்குகள், 1,600 நாரைகள், 120 நீர்கோழிகள்,  120 கானாங்கோழிகள், 120 மயில்கள், 200 மைனாக்கள், 240 மீன்கொத்தி பறவைகள், 40 மரம்கொத்தி பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1 மற்றும் 2ம்தேதி, இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது,’ என்றனர்.

Tags : Dharmapuri district , Dharmapuri: 400 people were engaged in bird surveying in 8 forest areas in Dharmapuri district. As the preliminary work is completed, it will come
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...