×

சேர்வலாறு அருகே பாதர் மலையில் இறுதிக்கட்ட பணியில் வனத்துறை தீவிரம் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்றுடன் நிறைவு

* யானை, செந்நாய் நேரடியாக கண்டு பதிவு

* சிறுத்தைகளின் கால் தடம் கண்டுபிடிப்பு

விகேபுரம் :  அம்பை கோட்டத்திற்குட்பட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இன்றுடன் கணக்கெடுக்கும் பணி நிறைவடைகிறது. இந்நிலையில் சேர்வலாறு அருகே பாதர்மலையில் இறுதிக்கட்ட கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார். இதில், யானை, செந்நாயை நேரடியாகவும், சிறுத்தைகளின் கால் தடத்தையும் கண்டுபிடித்து வனத்துறையினர் பதிவு செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்தாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் மற்றும் மூலிகை தாவரங்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்
கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்தாண்டு அம்பை கோட்டத்திற்குட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் ஆகிய நான்கு வனச்சரகங்களில் கடந்த 8ம் தேதி முதல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த  கணக்கெடுப்பு பணி, விலங்குகளை நேரடியாக பார்த்து கணக்கெடுப்பது, விலங்குகளின் எச்சம், கால்  தடம் உள்ளிட்டவைகளை அடையாளம் கண்டு கணக்கெடுக்கும் பணி என இரண்டு முறைகளில் நடந்து வருகிறது. இதற்காக அம்ைப, பாபநாசம் உட்பட 4 வனச்சரகங்களிலும் 33 பீட்டுகளாக  பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பீட்டுக்கும் வனக்காப்பாளர் தலைமையில் ஐந்து  பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட சேர்வலாறு அருகில் உள்ள பாதர் மலை  பீட்டில் முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி தலைமையில் வனவர்கள் பிரபாகரன்,  ராஜன், வனக்காப்பாளர் அர்ஜுன், மற்றும் வனக்காவலர் கனக துர்கா லட்சுமி,  வேட்டை தடுப்பு காவலர்கள் அய்யனார், சுமன் உள்ளிட்டவர்கள் கணக்கெடுக்கும்  பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மரங்களில் சிறுத்தையின் நகக்கீறல் மற்றும் கால் தடம்  உள்ளிட்டவைகளை பார்த்து பதிவிட்டனர். செந்நாய்கள், யானைகள் உள்ளிட்ட  விலங்குகளை நேரடியாக கண்டு பதிவேடுகளிலும், வனத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள மொபைல் ஆப்பிலும் பதிவு செய்தனர். இந்நிலையில் வனவிலங்குகள்  கணக்கெடுக்கும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் (22ம் தேதி) சுற்றுலாப்  பயணிகள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், சேர்வலாறு பகுதிகளுக்கு  சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Badar Hill ,Chervalar , Vikepuram: The work of enumeration in Kalakadu Mundanthurai Tiger Reserve under Ambai Division will be completed from today.
× RELATED பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 17,000 கனஅடி நீர் திறப்பு