×

பிரேசிலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு... 6 இடங்களில் அவசரநிலை பிரகடனம்!!

பிரேசில்: பிரேசில் நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடலோர மாகாணங்களில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், கடற்கரை பகுதியில் உள்ள சாலைகள் இடிந்து விழுந்தும், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தலைகீழாக கவிழ்ந்து இருக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. வெள்ளம் காரணமாக நகரின் பல இடங்களில் குடிநீர் மற்றும் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், பிரேசிலின் சா பெளலோ மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், பல வீடுகளும், கட்டிடங்களும் பூமியில் புதைந்தன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு பலரை மீட்டு வருகின்றனர். இதுவரை 46 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். எனினும், நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே , சா பெளாலோ மாகாணத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு மேலும் பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசும் என பிரேசில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சா பெளலோ மாகாணத்தில் உள்ள 6 நகரங்களில் அந்நாட்டு அரசு பேரிடர் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

Tags : Brazil , Brazil, heavy rains, landslides, casualties
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...