×

திருமுல்லைவாயலில் பள்ளிவாசல் அருகில் டாஸ்மாக்: கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர்:  திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் பகுதியில் டாஸ்மாக்  கடை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல் அமீன் பள்ளி வாசல் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் முல்லை கே.பலராமன், பள்ளிவாசல் நிர்வாகிகள் சிக்கந்தர், இம்தியாஸ், இப்ராஹீம் உள்பட பலர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் விவரம் வருமாறு,  திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், மெயின் ரோடில் கடந்த 20 ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் உள்ளது. மேலும் மதரசா வழிபாட்டு தலமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளிவாசலில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அரசு டாஸ்மாக் கடை அமையவுள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடை அமையவுள்ள பகுதியில் வெங்கடேஷ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி, செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, ராகவேந்திரர் ஆலயம் ஆகியவை அமைந்துள்ளன.

மேலும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் சரஸ்வதி நகர் விரிவாக்கம், முருகப்பா காலனி, அனுமான் நகர், ஜெயராம் நகர், தேவி ஈஸ்வரி நகர்,  தென்றல் நகர், முல்லை நகர், ஐயப்பன் நகர், லட்சுமி நகர், அம்மன் அவென்யூ, விநாயகா நகர், சிவசக்தி நகர், ஆர்.சி.குடியிருப்பு, டாக்டர் மூர்த்தி நகர், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் சரஸ்வதி நகர் மெயின்ரோடு உள்ளது.  

எனவே இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைத்தால் அனைவருக்கும் இடையூறாக இருக்கும் என்பதால் இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

Tags : Tasmak ,Tirumullaivale , TASMAC near Pallivasal in Tirumullaivayal: Complaint to Collector
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...