×

கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து புழல் ஏரி நீர்வரத்து கால்வாயில் வெளியேற்றப்படும் கழிவு நீர்: குடிநீர் மாசடையும் அபாயம்

புழல்: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக சோழவரம் ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த  ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர், ஏரியின் மதகு அருகில் இருந்து நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல், பால கணேசன் நகர், எம்ஜிஆர் நகர், ராஜாங்கம் நகர் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில், திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை ஆலமரம் பகுதி வழியாக புழல் ஏரிக்கு செல்கிறது. இந்த கால்வாயின் இருபுறமும் பல இடங்களில் ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த நீர் வரத்து கால்வாயில் விடப்படுகிறது. இதனால், கால்வாய் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. மேலும், கால்வாயில் ஆகாயத்தாமரை அதிகளவில் படந்துள்ளதால், நீரோட்டம் தடைபடும் நிலை உள்ளது. இதுகுறித்து,  சமூக ஆர்வலர்கள் செங்குன்றத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் குடிநீர் மாசு ஏற்பட்டு புழல் ஏரி கழிவு நீராக மாறும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கால்வாயில் கழிவுநீர் விடுபவர்கள், குப்பை போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘சோழவரம் ஏரிலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் நீர்வரத்த கால்வாயின் இருபுறமும் கரையை ஆக்கிரமித்து பலர் கடைகள், வீடுகளை கட்டி உள்ளனர். இதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்  ஏரி கால்வாயில் விடப்படுவதால், நீர் மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக மழை காலங்களில் கொசு தொல்லையால் பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் இந்த கால்வாயை குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் மற்றும் மோட்டார் சைக்கிள் கழுவுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரி மாசு அடைந்து வருகிறது. எனவே, இந்த கால்வாயின் இருபுறமும் தடுப்பு வேலி அமைத்து பாதுகாத்தால்தான் கால்வாய் சுத்தமாக இருக்கும். இதுதொடர்பாக, வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Puzhal , Effluent discharged from coastal encroachment houses into Puzhal lake canal: Risk of drinking water pollution
× RELATED புழல் சிறை கேன்டீன் – நீதிபதி ஆய்வு செய்ய ஆணை