திருப்போரூர்: திருப்போரூர் அருகே திருமணம் செய்து வைக்காததால், மனமுடைந்த வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூரை அடுத்துள்ள சிறுங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது இளைய மகன் ராஜேஷ் (25). இவர், வேலைக்குப் போகாமல் தினமும் மது அருந்தி விட்டு வீட்டில் பெற்றோரிடம் சண்டை போடுவது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வந்த ராஜேஷ், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும், அதற்கு முன்பு வீடு கட்டுமாறும் கூறி, பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார்.
உனது அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்த பிறகுதான் உனக்கு திருமணம் செய்ய முடியும் என்று பெற்றோர் தெரிவித்தனர். இதனால், மனமுடைந்த ராஜேஷ் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவம இடத்திற்கு சென்று இறந்த ராஜேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
