நெம்மேலி ஊராட்சியில் பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு:நெம்மேலி ஊராட்சியில், பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட துஞ்சம் கிராமத்தில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றன. அவர்களின், குடிநீர் தேவைக்காக  ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு துஞ்சம் கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நீர்த்தேக்க தொட்டியில் எந்நேரமும் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. அந்த குடிநீர் தொட்டியை தாங்கி பிடிக்கும் சிமென்ட் தூண்கள் நான்கு புறமும் பழுதடைந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு எலும்புகூடு போல காட்சி அளிக்கிறது. இதனிடையே, ஒருமுறைகூட குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ததில்லை எனவும்‌ கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த நீர்த்தேக்க தொட்டி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

நாங்கள் இந்த நீரைதான் குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறோம்‌. குடிநீர் தொட்டியின் தூண்கள் பழுதடைந்து எந்த நேரத்திலும் விழக்கூடிய நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தண்ணீர் தொட்டியை நேரில் ஆய்வு செய்து, சீரமைத்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: