எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கொலை குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கொலை குற்றவாளிக்கு கஞ்சா வழங்கிய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ராஜா (எ) ஆட்டோ ராஜா. இவரை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேர்  ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை ெதாடர்பாக ஜாம்பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான சிட்டி சேகர், தனுஷ், விக்னேஷ், பிரேம் ஆகியோரை 4 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கொலை வழக்கில் சிட்டி சேகரை தவிர்த்து தனுஷ், விக்னேஷ், பிரேம் ஆகிய 3 பேரும் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

இந்நிலையில் ஆட்டோ ராஜா கொலை வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சனிக்கிழமை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. இதற்காக, புழல் சிறையில் இருந்த சிட்டி சேகரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது ஏற்கனவே ஜாமீனில் வெளியில் வந்த மூன்று பேர், தனது கூட்டாளியான சிட்டி சேகரை சந்திக்க நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் 3 பேரும் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக மடித்து சிட்டி சேகரிடம் வழங்கினர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 3 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் 3 பேரும் தப்பியோடினர். ஆனாலும் போலீசார் விடாது அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: