×

மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு: பொதுமக்கள் பீதி, விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும், ஊராட்சியில் தினசரி குப்பைகளை அள்ள, சாக்கடை கால்வாய்களை தூர்வார ஊராட்சி நிர்வாகம் சார்பில் சில பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களால் போதிய அளவு துப்புரவு பணிகளை மேற்கொள்ள இயலாததால், பல இடங்களில் கால்வாய்களில் கழிவுநீர், மழைநீர், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதனால், பலருக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் என பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கால்வாய்களில் தேங்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், பல்வேறு தெருக்களில் நீண்ட காலமாக மழைநீர் செல்லும் கால்வாய்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அங்கு மழைநீருடன் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதிலிருந்து, ஏடிஎஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களாக தினமும் 5க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த, சில தினங்களாக தினமும் 20க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இதற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படாததே காரணம் என கூறப்படுகிறது. இதனால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை டெங்கு காய்ச்சல் வர காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்று, பல இடங்களில் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 50க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்த இடத்தில், தற்போது 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதுபோல, உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தினசரி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடமும், சுகாதாரத் துறையினரிடமும் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு பகுதியில் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு கொசு மருந்து அடித்தல், குளோரின் பவுடர் தெளித்தல் போன்ற துப்புரவு பணிகளை மேற்கொள்ள  வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு பகுதியில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை சளி, லேசான காய்ச்சல் மற்றும் இருமலுடன் பலர் சுற்றுகின்றனர்.

காய்ச்சல், அதிகரிக்கும்போது, மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், திருக்கழுக்குன்றம் மற்றும் செங்கல்பட்டு அரசு பொது  மருத்துவமனைகளை நாடுகின்றனர். அப்போது, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாடி பிடித்து பார்க்காமலும், உடல் வெப்பநிலை கணக்கிடும் கருவி மூலம் பரிசோதிக்காமல் நன்றாக தான் உள்ளீர்கள் என்ற கூறி உங்களுக்கு ஒன்றும் இல்லை என வீட்டிற்கு அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. இதனால், காய்ச்சல் அதிகமாகி உயிரிழக்கும் அபாய நிலைக்கு செல்கின்றனர். வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று பல லட்சங்களை கொடுத்து சிகிச்சை பெறுகின்றனர். வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். குறிப்பாக, மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துமனைக்கு சென்றால், அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளை எப்படி அணுக வேண்டும் என தெரியாமல் உள்ளனர்.

மேலும், சில மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை கொடுக்காமல், செவிலியர்கள் மற்றும் காயத்திற்கு கட்டு போடுபவர்களிடம் மாத்திரை கேட்கின்றனர்.   அவர்களும், ஏனோ தானோவென மாத்திரை கொடுத்து காலை - மாலை சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் போடுங்கள் என கொடுக்கின்றனர். இதனால், கடும் வயிற்று வலி, வாந்தி, பேதி, உடல் சோர்வு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு பகுதியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வேண்டும் என்றனர்.

டெங்கு கொசுவை கட்டுப்படுத்த சுகாதார துறை மூலம் ஒரு மருத்துவ முகாம் நடத்தி, கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று, அரசு மருத்துவமனையில் சேர்த்து, முழுமையாக குணமடைந்த பின் மீண்டும் அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

* அலட்சிய பதில்
டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது குறித்து, அரசு மருத்துவமனை செவிலியரை கேட்டபோது, டெங்கு கொசு உள்ளது என எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு பகுதியில் எங்களுக்கு புகார்கள் வந்தது. நாங்கள், ஒரு குழுவாக அப்பகுதிக்கு சென்று பார்த்த எங்களது கண்களுக்கு தெரியாமல், பயந்து எங்கேயோ ஓடி டெங்கு கொசு ஒலிந்து கொண்டது.  அங்குள்ளவர்களிடம், கொசுக்கள் எங்குள்ளது என்று கேட்டால் வாயை திறந்து பதில் கூற மறுக்கின்றனர். டெங்கு கொசு ஒலிந்திருக்கும் இடத்தை அப்பகுதி மக்கள் நேரில் அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என அலட்சியமாக பதில் கூறுவதாக செல்கின்றனர்.

* குடும்பத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
கடந்த டிசம்பர் மாதம் கொக்கிலமேடு மீனவர் பகுதியை சேர்ந்த மகாசுபாஷினி என்ற பெண்ணுக்கு முதலில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர், சில தினங்களில் இவரது சகோதரி நிஷாந்தினிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார்.  

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த டிசம்பர் மாதம் பரிதாபமாக பலியானார். இவர் தான், டெங்கு காய்ச்சலுக்கு முதல் பலியானார். இந்நிலையில், கடந்த 2 வாரத்துக்கு முன்பு 8 சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொக்கிலமேடு பகுதியில் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags : Mamallapuram ,Panchayat , Increase in dengue fever in Mamallapuram next Panchayat: Public panic, request to take immediate action
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...