×

மதுராந்தகம் ஏரியில் நடக்கும் தூர்வாரும் பணியால் விவசாயம் கடும் பாதிப்பு: நிவாரணம் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் நடந்து வரும் தூர்வாரும் பணியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு நிவாரணம் வழங்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய விவசாய பாசன ஏரியாக மதுராந்தகம் ஏரி இருந்து வருகிறது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 2,600 ஏக்கர். சுமார் 50 ஆண்டுகளாக தூர் வாராமல் உள்ள இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.122 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ஏரியில் தேங்கியிருந்த நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இந்த ஏரியின் கரைகள் உடைக்கப்பட்டு, ஏரியில் இருந்த நீர் முழுவதும் பல நாட்களாக கிளியாறு வழியாக வெளியேறி வங்காள விரிகுடா கடலில் கலந்தது. தற்போது, தண்ணீர் இல்லாமல் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.  இந்நிலையில் வறண்டுபோன ஏரியை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஏரியை சுற்றிலும் நிலத்தடி நீர்மட்டமானது தற்போது வேகமாக குறைந்து வருவதாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இனி வரும் காலம் கோடை காலம் என்பதால் அப்போது நிலத்தடி நீரின் இருப்பு இன்னும் வேகமாக குறைந்து விடும்.

அப்போது கடுமையான பாதிப்புக்கு ஆளாவது நிச்சயம் என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்களுக்கும் கிடைக்க வேண்டிய குடிநீர் வெகுவாக குறைந்துவிடும். இது மட்டுமின்றி கால்நடை வளர்ப்போர், விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்த ஏரியில் இருந்து 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரை கொண்டு நேரடியாக பயிர் செய்து வந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் தற்போது பயிர் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏனென்றால் ஏரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு விட்டது. மேலும், இனி மழை பொழிந்தாலும் ஏரியில் நீரினை சேகரித்து வைத்துக் கொள்ள முடியாத சூழலும் உள்ளது.  எனவே, மதகுகள் வழியாக ஏரி நீரை பெற்று விவசாயம் செய்து வந்த விவசாயிகள் இனி 2 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. ஏனென்றால், இந்த ஏரியினை தூர்வாரும் பணியினை முடிப்பதற்கான கால அவகாசம் வரும் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வரை என ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்பட வாய்ப்புள்ளது. எனவே, 2 ஆண்டுகளுக்கு ஏரியில் தண்ணீரை சேமிக்க முடியாது. அப்போது, நாங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைதான் இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த பெரிய ஏரி தூர்வாரப்படுவது மிகவும் அவசியம் என்றாலும், அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும், விவசாயத்தை நம்பி இருக்கும் குடும்பங்களுக்கும் அரசு என்ன நிவாரணம் செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags : Madhuranthakam Lake , Dredging in Madhuranthakam Lake has severely affected agriculture: Farmers hope for relief
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...