×

தி.நகரில் ரூ.23 கோடியில் அமைக்கப்படும் ஆகாய நடை மேம்பாலத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க ஏற்பாடு: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகரில் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக தி.நகர் திகழ்கிறது. இங்குள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பனகல் பார்க் அருகில், சத்யா பஜார் உள்ளிட்டவற்றில் ஏராளமான கடைகள் இருக்கின்றன. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. மொத்தமாகவும், சில்லறையாகவும் பொருட்கள் வாங்க வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பலரும் தி.நகர் வந்து செல்வதால், எப்போதும் கூட்ட நெரிசலாக காணப்படும்.

குறிப்பாக, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் நடந்து செல்வதற்கு கூட இடமின்றி தெருக்கள் நிரம்பி வழியும். மேலும், முக்கிய தெருக்களில் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. அந்த அளவிற்கு நெரிசல் மிகுந்த பகுதியாக தி.நகர் உள்ளது.
இந்நிலையில், பாதசாரிகள் வசதிக்காக, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்கு ஆகாய நடைமேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்மூலம் ஓரளவு நெரிசலை குறைக்கலாம் என திட்டமிடப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன.

 இது 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். 15 மாதங்களில் பணிகளை முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை ஏற்படுத்தியது. ஊழியர்கள் சரிவர பணிக்கு வராதது, ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை, மேம்பால திட்ட வடிவமைப்புகளில் செய்யப்பட்ட மாற்றம் போன்ற விஷயங்களால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஆண்டு பாதியில் இருந்து பணிகள் வேகமெடுத்தன.

தற்போது, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு இம்மாத இறுதியில் திறப்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாம்பலம் ரயில் நிலையத்தை தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். தி.நகர் ஷாப்பிங் ஏரியாவில் ஆயிரக்கணக்கானோர் சென்று வருவதை பார்க்கலாம். இவர்களுக்கு இந்த ஆகாய நடைமேம்பாலம் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*தினசரி ஆய்வு
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த ஆகாய நடைமேம்பாலத்திற்கு லிப்ட் வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி சேவை அளிக்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் லிப்டில் ஏறி அதன்பிறகு நடை மேம்பாலத்தில் எளிதாக பயணிக்கலாம். பாதசாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் வியாபாரிகள் யாரும் நடைபாதையை ஆக்கிரமிக்காமல் தினசரி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.




Tags : Skywalk ,D. Nagar , Skywalk flyover to be constructed at a cost of Rs 23 crore in D. Nagar to be opened for public use soon: Officials informed
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்