பெங்களூரு: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவின் முறைகேட்டை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ்சுக்கும், அங்குள்ள பெண் ஐஏஎஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. பேஸ்புக்கில் தனிப்பட்ட படங்களை பகிர்ந்ததால் இந்த பிரச்னை உருவாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி அடைக்கப்பட்ட போது அவர்கள் சிறையில் சலுகைகள் அனுபவித்து வந்ததை வெளியே கொண்டு வந்தவர் ரூபா மவுதிகல் ஐபிஎஸ். துணிச்சலாக பல கருத்துக்களை வெளியிடுவதால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி, அடிக்கடி இடமாற்றம் பெறுவார். தற்போது மாநில கைவினை பொருள் மேம்பாட்டு கழக இயக்குனராக உள்ளார்.
இதே போல் கர்நாடக மாநில அரசின் இந்து சமயஅறநிலைய துறை ஆணையராக இருப்பவர் ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ். இந்த இரு அதிகாரிகள் இடையிலான கருத்து மோதல் சில ஆண்டுகளாக இலைமறை காயாக இருந்து வந்தது. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபா, பேஸ்புக்கில் பதிவிட்ட சில தகவல்கள் மாநில அரசு மட்டுமின்றி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. பொறுப்பான பதவியில் இருக்கும் இருவரும் இப்படி வீதிக்கு வந்து சாமானிய மக்கள் போல், சண்டை போட்டு கொண்டிருப்பது பல கேள்விகளை மக்கள் முன் எழுப்பியுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் நடந்து வரும் சமயத்தில் பெண் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையிலான மோதல், ஆட்சி நிர்வாகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் யார் தவறு செய்துள்ளார்கள் என்ற விவாதமும் எழுந்துள்ளது. தங்கள் இடையிலான பிரச்னையை மேலதிகாரிகள் மட்டத்தில் முடித்து கொள்ளாமல், வீதிக்கு வந்திருப்பதன் மூலம் இருவரும் கடமை தவறி விட்டதாக முதல்வர் பசவராஜ்பொம்மை அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறியுள்ள போலீஸ் ஐஜி ரூபா மவுதிகலுக்கு எதிராக பாகல்குண்டே போலீஸ் நிலையத்தில் ரோஹிணிசிந்தூரி, அவரது கணவர் சுதீர்ரெட்டி மூலம் புகார் கொடுத்துள்ளார். அதில் சமூகத்தில் தனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ள ரூபா மவுதிகல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனிடையில் சொந்த விஷயத்தை மையமாக வைத்து இரு பெண் அதிகாரிகளின் செயல்பாடுகள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன் ஆட்சி நிர்வாகத்தின் மீதும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. எல்லை மீறி இருவரும் மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கூறி வரும் குற்றச்சாட்டுகள் அரசு நிர்வாகத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளதால், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மாநில தலைமை செயலாளர் வந்திததா சர்மாவுக்கும், டிஜிபி பிரவீன் சூட் ஆகியோருக்கு முதல்வர் பசவராஜ்பொம்மை உத்தரவிட்டார்.
* எப்படி வந்தது இந்த சண்டை?
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணியின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் ரோகிணி தனது தனிப்பட்ட புகைப்படங்களை 3 ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்ததாக ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ள வாட்ஸ்-அப் குழுவில் ரோகிணி எனது தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக ரூபா குற்றஞ்சாட்டி, ரோகிணியின் தனிப்பட்ட புகைப்படங்களை ரூபா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ரோகிணி கூறுகையில், ‘ரூபா எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க எனது புகைப்படங்களை எனது சமூகவலைதள பக்கங்கள், வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மூலம் சேகரித்துள்ளார். அவரது புகைப்படங்களை ஆண் அதிகாரிகளுக்கு நான் அனுப்பியதாக ரூபா கூறுகிறார். நான் யாருக்கு அனுப்பினேன், அவர்களின் பெயர்களை கூறும்படி ரூபாவிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
* என் பணியில் தலையிட ஐபிஎஸ் ரூபா யார்?ரோகிணி ஐஏஎஸ் கேள்வி
தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை சந்தித்து போலீஸ் ஐஜி டி.ரூபாவுக்கு எதிராக ரோகிணி ஐஏஎஸ் மூன்று பக்கங்கள் கொண்ட புகார் மனு கொடுத்தார். பின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘நான் மீடியாக்களுக்கு முன் எந்த தகவலும் மேலதிகாரிகள் அனுமதி இல்லாமல் கொடுக்ககூடாது. இருப்பினும் எனது தொழிலை பாதிக்கும் வகையில் ரூபா செயல்பட்டு வருகிறார். நான் ஆட்சி நிர்வாகம் செய்யும் அதிகாரியாக உள்ளேன்.
அவர் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளார். எனது நிர்வாக பணிகளில் தலையிடுவதற்கான அதிகாரம் ரூபாவுக்கு கிடையாது. ஆட்சி நிர்வாகத்தில் நான் தவறு செய்திருந்தால், என்மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை தலைமை செயலாளருக்கு மட்டுமே உள்ளதே தவிர, ஐபிஎஸ் அதிகாரிக்கு கிடையாது. எனக்கு எதிராக செயல்படும் ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.