×

மந்தனா அதிரடியில் இந்தியா முன்னேற்றம்

கெபர்ஹா: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், அயர்லாந்துக்கு எதிராக மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் வென்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ஷபாலி வர்மா, ஸ்மிரித் மந்தனா இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவரில் 62 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது.

ஷபாலி 24 ரன் எடுத்து டெலானி பந்துவீச்சில் ஹன்ட்டர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹர்மன்பிரீத் 13 ரன் எடுத்து வெளியேற, ரிச்சா கோஷ் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதிரடியாக விளையாடிய மந்தனா 87 ரன் (56 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் தீப்தி ஷர்மா (0), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (19 ரன்) வெளியேற, இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. பூஜா வஸ்த்ராகர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அயர்லாந்து பந்துவீச்சில் டெலானி 3, ஓர்லா 2, கெல்லி 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, ரேணுகா சிங் வீசிய முதல் ஓவரிலேயே ஹன்ட்டர் (1), ஓர்லா (0) விக்கெட்டை இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. எனினும், கேபி லூயிஸ் - டெலானி ஜோடி 3வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி ரன் சேர்த்தது. அயர்லாந்து 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்திருந்தபோது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கேபி 32 ரன், டெலானி 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை நிற்காததால் டி/எல் விதிப்படி இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags : India ,Mandana , India progress in Mandana action
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...