×

டிஎன்பிஎல் தொடரில் மாவட்ட வீரர்களுக்கு அதிக வாய்ப்பு: டிஎன்சிஏ அறிவிப்பு

சென்னை: தமிழ்  நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரில் மாவட்ட அளவிலான வீரர்களுக்கு  அதிக வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக டிஎன்சிஏ செயலாளர் பழனி   அறிவித்துள்ளார்.
தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நடத்தி வரும் இந்த தொடரில் பங்கேற்கும்  அணிகளில், கணிசமான அளவில் வட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள்  விளையாட ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாடும்   தமிழ்நாடு அணியிலும் வடமாநில வீரர்கள் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால்  திறமையான தமிழ் வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற புகார்  எழுந்துள்ளது.

இந்நிலையில் டிஎன்சிஏ பொறுப்புக்கு வந்துள்ள புதிய  நிர்வாகிகள் ‘மாவட்ட அளவில் திறமையான வீரர்களை கண்டறிந்து வாய்ப்புகள்  அளிக்கப்படும்’ என்று அறிவித்தனர். அதனால் தமிழ்நாடு அணியிலும் முன்பு  போல் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கும் என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில்,  டிஎன்பிஎல் 7வது சீசனில் மாவட்ட அளவிலான  வீரர்களுக்கு  வாய்ப்பளிக்க வேண்டும் என்று டிஎன்பிஎல் அணி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி  உள்ளதாக, டிஎன்சிஏ செயலாளர் பழனி தெரிவித்துள்ளார். இதற்கான ஏலம் பிப். 23, 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

இதில்  பங்கேற்க 943 வீரர்கள் பதிவு  செய்துள்ளனர். இவர்கள் இந்திய அணிக்காக விளையாடியவர்கள்,  உள்நாட்டு  போட்டிகளில் பங்கேற்றவர்கள்,  டிஎன்பிஎல் தொடர்களில் 30க்கும் மேலான  ஆட்டங்களில் விளையாடியவர்கள், புதுமுக வீரர்கள்  என 4 பிரிவுகளாக  பிரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுவர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை வீரர்களை  தேர்வு செய்ய செலவிட அனுமதிக்கப்படும். ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளும் 16  முதல் 20 வீரர்களை தேர்வு செய்யலாம்.

Tags : TNPL ,TNCA , Greater chance for district players in TNPL series: TNCA announcement
× RELATED டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது!