சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கில் இதுவரை ரூ.61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பான காணொலிகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்தால் சி-விஜில் செயலி மூலமாக புகார் அனுப்பலாம். சி-விஜில் செயலி மூலமாக ஒரே ஒரு புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.
சி-விஜில் செயலி மூலமாக அனுப்பினால் அனுப்புபவரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படாது. ஈரோடு கிழக்கில் சட்டம்-ஒழுங்கு சுமுகமான முறையில் உள்ளது. பல புகார்கள் வந்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி இதுவரை புகார் எதுவும் தலைமை தேர்தல் அலுவலரிடம் வரவில்லை. கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. டெல்லி தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
