5 ஐம்பொன் சுவாமி சிலைகள் கொள்ளை

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்றுப்படுகையில் வாசுதேவ கண்ணன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து விட்டு, பூசாரி கோயிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை கோயிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர். அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. போலீஸ் விசாரணையில், நள்ளிரவில், கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கருவறையின் கதவை உடைத்து அங்கிருந்த உற்சவமூர்த்திகளான வாசுதேவ கண்ணன், ராதா, ருக்மணி, ராமானுஜர், சுதர்சன ஆழ்வார் ஆகிய 5 ஐம்பொன் சுவாமி சிலைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அங்குள்ள சிசிடிவி கேமரா ஹாட் டிஸ்க்கையும் மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதேபோல், வெள்ளையம்பதி கிராமத்தில் கல்லாவி மெயின் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில்  தங்க நகை மற்றும் உண்டியலை பணத்துடன் திருடிச்சென்றிருப்பதும் தெரிந்தது.

Related Stories: