விழுப்புரம் ஆசிரமம் மீதான வழக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது: கைதான 7 பேர் சிகிச்சைக்கு வந்து ஊழியர்களாக மாறியது அம்பலம்

விழுப்புரம்: ஆசிரம வழக்கு தொடர்பான ஆவணங்களை எஸ்பி ஸ்ரீநாதா முன்னிலையில் சிபிசிஐடியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் கைதான ஊழியர்கள் 7 பேரும் சிகிச்சைக்கு வந்து பணியாளர்களாக மாறிய தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் கோவை, விழுப்புரம், கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரமத்தை நடத்தி வந்துள்ளார். கடந்த 2004 முதல் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் ஆசிரமத்தை துவக்கி உள்ளார். இந்த ஆசிரமத்தில் சிலருக்கு பாலியல் தொந்தரவு, சித்திரவதை மற்றும் பலர் மாயமானதாக புகாரையடுத்து கெடார் போலீசார் வழக்குபதிந்து ஆசிரம உரிமையாளர் ஜூபின்பேபி அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ஆசிரமத்திலிருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 53 பேரை அவர் பெங்களூருவில் உள்ள நண்பர் ஆட்டோ ராஜாவின் காப்பகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அதிலிருந்து 11 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, தேசிய மகளிர்ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனாகட்டார், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவி குமாரி ஆகியோர் குண்டலப்புலியூர், காலாப்பட்டு ஆசிரமங்களில் நேரில் விசாரணை நடத்தியதில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கு, கடந்த 18ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று கெடார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர், விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள், எஸ்பி நாதா முன்னிலையில் சிபிசிஐடி போலீசாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலையே அவர்கள் விசாரணையை துவங்கினர்.

இந்நிலையில் ஆசிரமத்தின் ரகசியங்கள் இத்தனை ஆண்டுகள் வெளியாகாமல் இருந்தது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரம பணியாளர்கள் பிஜூஆனந்த், பூபாலன், முத்துகுமாரி, கோபிநாத், அய்யப்பன், தாஸ், சதீஷ் ஆகிய 7 பேரும் ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக வந்தவர்கள். குணமடைந்ததும் அங்கேயே பணியாளர்களாக நியமித்து, மாத சம்பளம் கொடுத்து வந்துள்ளார் ஜூபின்பேபி. அவர்களை வீட்டிற்கும் அனுப்பாமல் அங்கேயே அறை ஒதுக்கி ஆசிரமத்தின் ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருக்கவும், அங்கு நடக்கும் குற்ற செயல்களுக்கு துணையாகவும், ஆசிரமத்தை பாதுகாக்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: