×

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் தமிழ்நாடு மாணவர்கள் மீது ஏ.பி.வி.பியினர் தாக்குதல்

புதுடெல்லி: மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜே.என்.யு) நேற்று முன்தினம் மாலை ஊர்வலம் சென்றனர். இதைத்தொடர்ந்து ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறை இருக்கிறது என்பது குறித்தான ஆவணப்படம் ஒன்று அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிட திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அதேப்போன்று தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜே.என்.யுவில் பயிலும் மாணவர்களும் பங்கேற்றனர்.

இதையடுத்து கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி சிவாஜியின் படம் மர்மமான முறையில் சேதம் அடைந்து இருந்தது. இதற்கு சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி ஊர்வலம் சென்ற மாணவர்கள் தான் காரணம் எனக்கூறி, ஏபிவிபி அமைப்பினர், ஆவணப்படம் திரையிடப்படவிருந்த அரங்கிற்கு சென்று அங்கிருந்த மற்ற மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலின் போது அங்கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் படங்களையும் ஏ.பி.வி.பி மாணவர்கள் அடித்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் நாசர் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விடாமலும் ஏ.பி.வி.பி.யினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டது.

சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் லேசான காயமடைந்தவர்கள் மீண்டும் பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பியுள்ள நிலையில், பலர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : ABVP ,Tamilnadu ,Delhi Jawaharlal ,Nehru University , ABVP attack on Tamilnadu students in Delhi Jawaharlal Nehru University
× RELATED டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள்...