×

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணும் வரை பொறுமையாக இருப்போம் அதிமுக சட்ட விதிகளை சிதைத்து விட்டார்: எடப்பாடி மீது ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு; கட்சியை மீட்டெடுப்போம் என தீர்மானம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் வரை பொறுமையாக இருப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த நடைமுறையை தூக்கி எறிந்துவிட்டு, அதிமுகவின் சட்டவிதியை சிதைத்துவிட்டு, தனது இரும்பு பிடிக்குள் அதிமுகவை கொண்டு போய்விட வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதை அதிமுக தொண்டர்கள் உடைத்து எறிவாளர்கள் என எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் கடுமையாக தாக்கி பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரசார களம் சூடுபிடித்திருக்கிறது.

அனைத்துக்கட்சி அரசியல் தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், கூட்டணி கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தனது அணி வேட்பாளரை வாபஸ் வாங்கிக் கொண்டு, இரட்டை இலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால் எடப்பாடியும், அவரது அணியினரும் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவிப்பை நிராகரித்து விட்டனர். அவரை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் அணியினர் விரக்தி அடைந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஆதரவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்ஜிஆர் இருக்கும்போது அதிமுகவில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். ஜெயலலிதா அதை ஒன்றரை கோடி தொண்டர்களாக உயர்த்தி காட்டினார். இருபெரும் தலைவர்களும் தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியை வழங்கினர். மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கினர். இந்திய அரசியலில் தமிழகத்தின் அரசியலில் ஒரு தனிப்பட்ட கட்சி, தமிழகத்தில் அதிகநாள் ஆண்ட கட்சி அதிமுகதான். மக்களின் அன்பை பெற்று, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்று பாசத்தோடு, உறுதியாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

அதற்கு பிறகு நடந்த சூழ்நிலைகள் எல்லாம் தொண்டர்களுக்கு நன்றாக தெரியும். லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் கட்சியின் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று அதிமுக அடிப்படை கொள்கையாக, சட்ட விதியாக கொண்டு வரப்பட்டது. தலைமை பொறுப்பை ஏற்பவர்களை அடிப்படை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சட்டவிதியாக கொண்டு வந்தார். அப்படிதான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தலைமை பதவியை வகித்தார்கள். இதுதான் அதிமுகவின் வரலாறு.

ஜெயலலிதா மறைந்த பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதுவும் தொண்டர்கள் வாக்களித்துதான் அந்த பதவி கொண்டு வரப்பட்டது. தேர்தலில் இவர்கள் இருவரும் கையெழுத்து போட்டால்தான் இரட்டை இலையில் நிற்க முடியும் என்ற விதி கொண்டு வரப்பட்டது. அந்த வரலாற்றை இன்றைக்கு எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துதான் பொதுக்குழுவில் அரங்கேற்றினார்கள். சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என்று யாருக்கும் தெரியாமல் அறிவிப்பு செய்யப்பட்டது.

அதிமுகவில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், யார் என்று தெரியும். அவர் பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. காரணம், அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த நடைமுறையை தூக்கி எறிந்துவிட்டு, தன்னுடைய இரும்பு பிடிக்குள் இந்த இயக்கத்தை கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும் என நாடகம் நடத்தினார்கள். அதெல்லாம் அலங்கோலமாக முடிந்தது. ஒன்றரை கோடி தொண்டர்கள் தந்த ஒருங்கிணைப்பாளர் பதவியை தூக்கி காற்றில் பறக்க விட்டார்கள். ஜெயலலிதா நிறைவேற்றி தந்த சட்டவிதியை காப்பாற்றியே தீர வேண்டும் என்று நாம் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை இன்று ஒத்தி வைத்திருக்கிறது. தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலையை யாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் இடையில் ஒரு பிரச்னை வருகிறது. அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தான் இருக்கிறது. ஆனால் நீதிமன்றம் மாற்றி தீர்ப்பு சொல்லி உள்ளது. நீதிக்கு தலை வணங்குகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர். அதுதான் மகேசன் தீர்ப்பு. அது விரைவில் வரும். நாம் தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம். கடைசி வரை தர்மத்தின்படி போராடி அதிமுகவின் சட்டவிதியை காப்பாற்றுவோம் என்று நிர்வாகிகள் கூறி உள்ளீர்கள். அதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

அடுத்து வரும் காலக்கட்டத்தில் அதிமுகவின் ஒரு சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராகவும், அதிமுக ஆட்சி அமையும்போது முதலமைச்சராகவும் அமரக்கூடிய வாய்ப்பை நாங்கள் உருவாக்குவோம். அதுதான் எங்கள் தர்மயுத்தத்தின் தலையாய கடமை ஆகும். எதற்கும் அஞ்சாதீர்கள், துணிந்து நில்லுங்கள். உங்களுக்கு முன்பாக நாங்கள் இருக்கிறோம், கண்டிப்பாக காப்பாற்றுவோம். ஈரோட்டில் ஓட்டு கேட்டு போகும்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

அதற்குள் செல்ல விரும்பவில்லை. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணும்போதுதான் தெரியும். அதுவரை பொறுமையாக இருப்போம். எங்களது வேட்புமனுவை வாபஸ் பெறுவோம், இரட்டை இலைக்கு ஆதரவாக இருப்போம் என்றோம். எந்த நல்ல பதிலும் இல்லை. எந்தளவுக்கு மனதில் ஒரு கொடூரமான புத்தியை வைத்துக் கொண்டு அதிமுகவை தன்னுடைய இரும்பு பிடிக்குள் அடங்கி வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதை உறுதியாக அதிமுக தொண்டர்கள் உடைத்து எறிவார்கள். அது உறுதியாக நடக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா இந்த இயக்கத்தை காப்பாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

* சர்வாதிகார, சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்: ஓபிஎஸ் கூட்டத்தில் தீர்மானம்
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* அதிமுக என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம்.
* சர்வாதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், இரட்டை இலை சின்னத்தையும் நிரந்தரமாக பெற்று, 2019 மக்களவை தேர்தல் தோல்வி, 2019 கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி, 2021 சட்டமன்ற தேர்தல் தோல்வி, 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவை வெற்றி பாதையில் அழைத்து செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான்.
* எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் அதிமுகவின் பொன்விழா என முப்பெரும் விழா வருகிற மார்ச் மாதம் நடத்தப்படும்.
* அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வருகிற 27ம் தேதி நடைபெறுவதால், ஓபிஎஸ் அணியினர் அதிமுக வேட்பாளருக்கு  ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரை கூட  உச்சரிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார். அதேபோன்று இடைத்தேர்தலில்  யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் அவரது பேச்சு உறுதிபடுத்தியுள்ளது.

Tags : Erode East Constituency ,AIADMK ,O. Panneerselvam ,Edappadi , Let's be patient till counting of votes in Erode East Constituency AIADMK has broken the rules: O. Panneerselvam hard attack on Edappadi; Resolution to revive the party
× RELATED உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட...