×

இன்று மாசி அமாவாசை: ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சனி பிரதோஷம், மகாசிவராத்திரியையொட்டி கடந்த 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாசி அமாவாசை என்பதால் சென்னை, கோவை, நெல்லை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாசி அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உட்பட 18 வகையான அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி உற்சவத்தின் பத்தாம் நாள் அமாவாசையான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறந்து ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்கி அருள் பாலித்தனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

Tags : Masi Amavasi ,Rameswaram ,Chaturagiri , Masi Amavasi today: Devotees throng Rameswaram, Chaturagiri
× RELATED மாநகராட்சியின் பல்வகை...