ராஜபாளையம் பகுதியில் விவசாய கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் மாசு-பொதுமக்கள் புகார்

ராஜபாளையம் : ராஜபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாய கழிவுப் பொருட்களை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.எதிர்பார்த்த அளவு பருவமழை கை கொடுத்ததால் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக மா, தென்னை, பருத்தி, கரும்பு, நெல் மற்றும் பனை, வாழை அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

அறுவடைக்கு பின்னர் வயல்கள், தோட்டங்களில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்ற வழி இல்லாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன் தென்னை, பனை ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு வீடுகளுக்கு மேற்கூரை அமைத்தனர். கரும்பு, பருத்தி விளைச்சலில் மீதமாகும் கழிவுகளை எரிபொருளாகவும் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. அறுவடை போக மீதமுள்ள விவசாய கழிவுப்பொருட்களை வாங்க ஆளில்லை.

ஏற்கனவே விவசாயத் தொழிலில் லாபம் குறைந்து விட்ட நிலையில் கழிவுகளை அப்புறப்படுத்த கூடுதலாக செலவு செய்யும் நிலையில் விவசாயிகள் இல்லை. இதனால் வேறு வழி இல்லாமல் விவசாய நிலங்களிலேயே கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு தீ வைத்து எரிப்பதால் அதிக அளவு புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசுபாடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். காற்று மாசு அதிகரித்தால் இயற்கையில் மாற்றம் ஏற்பட்டு, விவசாயத்திற்கு ஒவ்வாத நிலை ஏற்படும் என்றும் பொதுமக்கள் எச்சரித்து வருகின்றனர். தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டும் விளை பொருட்களில் மீதமாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் பகுதியிலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: