×

பட்டுக்கோட்டை அருகே நைனாங்குளத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகளுடன் குறுங்காடு அமைப்பு

*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே நைனாங்குளத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகளுடன் குறுங்காடு அமைக்கப்பட்டு்ள்ளது. இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த முதல்சேரி ஊராட்சிக்குட்பட்ட நைனாங்குளத்தில் நைனார் கோயில் அருகே சுமார் 40,000 சதுர அடியில் 4,000 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் பலா, வேம்பு, புங்கை, கொய்யா, கொடுக்காப்புளி,இலைபுரசு, நல்லத்தி, உள்ளிட்ட 30 வகையான மொத்தம் 4,000 மரக்கன்றுகளை வழங்கியது.

குறுகிய இடத்தில் அதிக அளவு மரங்களை நடும்போது அது மிகவேகமாக வளர்கிறது என்பதை கண்டறிந்து ஜப்பான் நாட்டை சேர்ந்த மியாவாக்கி என்பவரால் இந்த குறுங்காடுகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குறுங்காடுகளால் பறவைகள், கிளிகள், உயிரினங்கள் பெருகும். இந்த பகுதியில் ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைக்கும். இந்த குறுங்காடுகள் 3 ஆண்டு காலத்தில் 5 ஆண்டு கால வளர்ச்சியும், 5 ஆண்டு காலத்தில் 10 ஆண்டு கால வளர்ச்சியும் தரும்.

இந்த குறுங்காடுகளை தொடர்ந்து பராமரித்து, பாதுகாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 47 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம் என்றால் அரை ஏக்கரில் காடு இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இந்த குறுங்காடுகளால் பல்லுயிர் தத்துவத்தை நாம் தொடர முடியும். நைனாங்குளம் நையினார் கோயில் அருகே நடந்த குறுங்காடுகள் அமைக்கும் திட்ட துவக்க விழா நிகழ்ச்சிக்கு முதல்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ரோசம்மாள்யாக்கோப் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உஷாராணிரமேஷ், தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் ராமதாஸ், செயலாளர் கவி, பொருளாளர் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், தன்னார்வ தொண்டு நிறுவன மாவட்ட கவர்னர் தாமஸ்ஆரோக்கியராஜ் ஆகியோர் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள், 100 நாள் வேலைத்திட்ட பெண்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை அருகே நைனாங்குளத்தில் உள்ள இந்த குறுங்காடுகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து நைனாங்குளம் விவசாயி நமச்சிவாயம் கூறுகையில், இந்த குறுங்காடுகளால்ஆக்ஸிஜன் உற்பத்தி பெருகும். பல்லுயிர் பெருக்கம் அதிகமாகும். இந்த குறுங்காடுகளால் எங்கள் கிராமத்திற்கு மிகவும் பெருமையாக உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு கிராமத்திலும் குறுங்காடுகள் அமைக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் வைக்கின்றோம் என்றார்.

Tags : Ninangulam ,Palukkotta , Pattukottai: A nursery with 4000 saplings has been set up at Nainangulam near Pattukottai.
× RELATED பட்டுக்கோட்டை திமுக பிரமுகர்...