நீலகிரியில் விவசாய நிலங்களில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்க கூடாது

*மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தல்

ஊட்டி :  நீலகிரி  மாவட்டத்தில் விவசாய நிலங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி  வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி  மாவட்ட மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம்  உள்ளது. தேயிலைக்கு நிலையான விலை கிடைக்காத நிலையில் தேயிலை தோட்டங்கள்  அனைத்தும் கட்டிடங்களாக மாறி வருகின்றன.

காய்கறி தோட்டங்களிலும்  கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சாிவான  பகுதிகளில் பல சிறு குறு  விவசாயம் மேற்கொண்டு வந்தனர். சரிவான  பகுதி என்பதால் திட்டமிடப்பட்ட சாலை வசதிகள் கிடையாது. இருப்பினும் ஒரு  விவசாயி தனது நிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால், மற்ற விவசாயிகளின் விளை  நிலங்களின் வழியாக தான் சென்று வந்தனர். அவர்களுக்குள் எவ்விதமான  பிரச்னைகளும் ஏற்பட்டதில்லை.

இந்நிலையில் தற்போது நீலகிரி  மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளை நிலங்களை வாங்கும் பணக்காரர்கள் அங்கு  வானுயர்ந்த கட்டிடங்களை கட்டுகின்றனர். வேலிகள் அமைப்பது மட்டுமின்றி நீர்  ஆதாரங்களையும் மறித்து விடுகின்றனர். இதனால் அடுத்தடுத்துள்ள விவசாயிகள்  தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் தேயிலை  மற்றும் காய்கறி விளை நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு  கட்டிடங்கள் உருவாவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே  மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு விவசாய நிலங்களில்  கட்டிடம் கட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து நீலகிரி மாவட்டத்தில்  விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக  கலெக்டருக்கு மனுவும் அனுப்பியுள்ளனர்.

Related Stories: