×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்

*சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் வீதியுலா

*அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, அங்காளம்மன் வீதியுலாவில் பங்கேற்ற பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. அதேபோல், அனைத்து சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரி விழா நடந்தது.

மகா சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து இறைவனை வழிபட்டனர். சிவாலயங்களில் இரவு முழுவதும் 4 கால பூஜை நடந்தது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் நள்ளிரவில் லிங்கோத்பவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பால், சந்தனம், வாசனை திரவியங்களால் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நள்ளிரவில் தாழம்பூ அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, மாசி மாத அமாவாசை தினமான நேற்று மயானக்கொள்ளை விழா கோலாகலமாக நடந்தது. திருவண்ணாமலை கருவாட்டுக்கடை தெரு, மணலூர்பேட்டை சாலை, புதுவாணியங்குளத் ெதரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அங்காளம்மன் ேகாயில்களில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் வீதியுலா நடந்தது.அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ேமலும், சிவன், பார்வதி, காளி உள்ளிட்ட பல்ேவறு ேவடங்கள் அணிந்த பக்தர்கள், ஊர்வலத்தில் பங்ேகற்று தங்களுைடய ேநர்த்திக்கடனை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, ஈசான்ய மயானத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தது.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று கோபால விநாயகர், அங்காளம்மன், பெரியாழி மற்றும் முத்து மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, மயானக்கொள்ளை திருவிழாவில் திரளான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, காளி வேடம் அணிந்து தாரை, தப்பட்டை முழங்க பூங்கரக ஊர்வலம் நடந்தது. பின்னர், அங்குள்ள மயானத்தில் கும்பம் அமைத்து கொட்டை, கொழுக்கட்டை ஆகியவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தினர். மேலும், சுற்றுப்புற கிராம மக்கள் தங்களது நிலங்களில் விளைந்த பொருட்களை மயானத்தில் கொள்ளை விட்டனர்.

சேத்துப்பட்டு அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், துர்க்கை, பெரியாழி, பொட்டு அம்மன், நாகாத்தம்மன் நவக்கிரகம் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின்னர், மாலை நடந்த ஊர்வலத்தில் அங்காளம்மன் 16 கைகளுடன்கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வலம் செஞ்சி சாலை, வந்தவாசி சாலை, பாலமுருகன் தெரு வழியாக வன்னியந்தல் ஏரியில் உள்ள மயானத்திற்கு சென்றதும், அங்கு மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. அப்போது, பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த வேர்க்கடலை, காய்கறிகள் மற்றும் கொழுக்கட்டை ஆகியவற்றை கொள்ளைவிட்டனர். பின்னர், அம்மன் மீண்டும் கோயிலுக்கு வருகை தந்தது. அப்போது, அம்மனுக்கு சிறப்பு ஆர்த்தி எடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.

கலசபாக்கம்:  கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு ஊராட்சி மதுரா தென்பள்ளிப்பட்டு, சிறுவள்ளூர், தென்மகாதேவ மங்கலம், மேல்சோழங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் சுவாமி வந்து ஆடினர். மேலும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதத்தில் குழந்தைகளின் உருவ பொம்மைகளை செய்து மயானக்கொள்ளையில் வழிபட்டு கொள்ளை விட்டனர். அதேபோல், நாடகக்கலைஞர்கள் அம்மன் வேடம் அணிந்து விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு பெரும்பாலான கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மயானக்கொள்ளை விழா, அங்காளம்மன் வீதியுலா நடந்தது. விழாவை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.வந்தவாசி: வந்தவாசி நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி, அம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் வீதி உலா நடந்தது. முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலம் சென்று புதிய பஸ் நிலையம் எதிரே அமைத்துள்ள மைதானத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தது.

சுவாமி வீதிஉலா செல்லும்போது பக்தர்கள் அலகு குத்தியும், உரல்கள் மற்றும் லோடு ஆட்டோவை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியபடி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், பல பக்தர்கள் காளி வேடம் அணிந்து பக்தர்களிடம் பரவசம் ஏற்படுத்தினர். ஊர்வலம் செல்லும்பாதை முழுவதும் பக்தர்கள் கொழுக்கட்டைகளை சுவாமி மீது தூவினர். ஊர்வலத்தில் அசம்பாவிதத்தை தவிர்க்க டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆரணி: ஆரணி நகரில் வ.ஊ.சி.தெரு மற்றும் அண்ணா சிலை அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில்  மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நேற்று காலை கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் இருந்து பூங்கரகம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன் வாகனத்தில் அமர்த்தப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலகமாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, விரதமிருந்த பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்து வந்து சுவாமிக்கு மாலை அணிவித்தனர். அதேபோல், பக்தர்கள் உடலில் எலுமிச்சை பழம் குத்திக்கொண்டும், தேர் இழுத்தும், காளி வேடம் அணிந்தும், முதுகில் அலகு குத்திக்கொண்டு உரல் இழுத்து சென்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஊர்வலத்தில் விளைதானியங்கள், கொழுக்கட்டை ஆகியவற்றை அம்மன் மீது வீசி பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் மயானக்கொள்ளை விடப்பட்டது. இதேபோல், ஆரணி சுற்றுவட்டார கிராமங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயானக்கொள்ளை திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் நாகநதி ஆற்றின் தென்கரையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை விழாவையொட்டி நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன. பின்னர், மாலை உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது, பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், கொக்காலி கட்டை கட்டியும், வாகனத்தில் அந்தரத்தில் பறந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முடிவில் நாகநதிக்கரையை ஊர்வலம் வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொழுக்கட்டை, எலுமிச்சை பழம், சாக்லேட் உள்ளிட்டவைகளை  கொள்ளை விட்டு கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர்.

போளூர்: போளூர் அல்லி நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், பூங்காவனத்தம்மன் கோயில்களில் நேற்று மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடந்தது.
முன்னதாக, 2 அம்மன் தேர்களும் அல்லி நகரில் இருந்து புறப்பட்டு, பின்னர் நகர் முழுவதும் ஊர்வலமாக வந்து பஜார் வீதியில் 2 அம்மன் தேர்களும் ஒன்றாக நேருக்குநேர் சந்தித்தது. அங்கு பூஜைகள் செய்ததும் பின்னர் பிரிந்து சென்று மயானத்திற்கு சென்றதும் கொள்ளை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மயானத்தில் கொள்ளை விட்டதும் அம்மன்கள் மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

Tags : Mayanagakai Festival Kolagalam ,Tiruvannamalai District , Thiruvannamalai: The Mayanagogai festival was held in Tiruvannamalai district yesterday. In turn, in Angalaman Veethiula
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...