×

நண்பர் ஏமாற்றியதாக கூறி நெல்லை புதிய பஸ் நிலைய கட்டிடத்திலிருந்து கீழே குதித்த வாலிபர்-தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்

நெல்லை :  நண்பர் தன்னை ஏமாற்றி விட்டதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போலீசாரை மிரட்டி, நெல்லை புதிய பஸ் நிலைய கட்டிடத்திலிருந்து கீழே குதித்த விருதுநகர் வாலிபரை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக காப்பாற்றினர்.நெல்லை வேய்ந்தான்குளத்திலுள்ள புதிய பஸ் நிலையம் நேற்று வழக்கமான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது மாலை 3 மணியளவில் 6வது பிளாட்பாரத்திலுள்ள கட்டிடத்தின் மாடிப்பகுதிக்கு ஏறிச்சென்ற வாலிபர் ஒருவர் கட்டிடத்தின் சுவர் மீது அமர்ந்து கொண்டு கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் வியாபாரிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகவலறிந்த பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் கனமான போர்வைகளுடன் விரைந்து வந்தனர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்காத அந்த நபர், தன்னை நண்பர் ஒருவர் ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தான் கண்டிப்பாக கீழே குதித்து தற்கொலை செய்வேன் என்றும் மிரட்டிக் கொண்டேயிருந்தார்.

நண்பரை வரவழைத்து பேசி தீர்வு காணலாம் என்றும் தாங்கள் அதற்கு உதவுவதாகவும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வாலிபரோ போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு மதிப்பளிக்காமல் திடீரென 14 அடி உயரமான பகுதியிலிருந்து கீழே குதித்தார். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் தயாராக பிடித்துக் கொண்டிருந்த போர்வையின் மீது அந்த வாலிபர் விழுந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து கீழே 4 மணிக்கு இறக்கினர்.

இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி அருகேயுள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்த சிந்தாமணி மகன் ரகுவரன் (40) என தெரிய வந்தது. அவர் பாளை பெருமாள்புரத்தில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அவருடன் வேலை பார்த்து வரும் நண்பர் ரூ.2 ஆயிரம் கடன் பெற்று விட்டு தராமல் ஏமாற்றி வந்ததால், மன வேதனையில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தார். போலீசார் அவரை எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு விடுவித்தனர்.

Tags : Nell , Nellai: Nellai threatened the police that she was going to commit suicide as her friend had cheated on her, and she went to the new bus station.
× RELATED நெல்லை மாவட்ட காங்., தலைவர்...